இந்தியாவில் புதிய அலுவலகத்தை அமைக்கும் டெஸ்லா, இந்தியாவில் அதன் திட்டம் என்ன?
கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடியை, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சந்தித்த பின்பு, கடந்த வாரம் டெஸ்லா நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இந்தியாவில், மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியுஷ் கோயலைக் சந்தித்துச் சென்றிருக்கிறார்கள். இந்தியாவில் தயாரிப்புத் தொழிற்சாலை அமைக்கப்படும் பட்சத்தில், தங்களுக்கு இந்திய அரசு வழங்கும் சலுகைகள் குறித்து அவர்கள் உரையாடியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, தற்போது புனேயில் புதிய அலுவலகம் ஒன்றை அமைக்க டெஸ்லா நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. புனேயின் வியம் நகரில் உள்ள முக்கிய பகுதியான பஞ்ச்சீல் பிஸ்னஸ் பார்க்கில் அலுவலகம் அமைப்பதற்கான இடம் ஒன்றைத் தேர்வு செய்து, ஐந்து வருட காலத்திற்கு ஒப்பந்தமும் செய்திருக்கிறது டெஸ்லா.
இந்தியாவில் டெஸ்லாவின் திட்டம் என்ன?
அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களைத் தவிர்த்து, பிற நாடுகளில் பெர்லின் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களில் தங்களுடைய கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவியிருக்கிறது டெஸ்லா. தற்போது குறைந்த விலை டெஸ்லா கார்களை உற்பத்தி செய்யும் வகையில் இந்தியாவில் புதிய தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நிறுவவும் அந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. உலகளவில் தங்களுடைய குறைந்த விலை மாடலாக சீனாவில் 32,200 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.27 லட்சம்) விலையில் மாடல் 3 செடானை விற்பனை செய்து வருகிறது டெஸ்லா. இந்தியாவில் அதனை விட குறைந்த விலையாக 24,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.20 லட்சம்) விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.