இந்தியாவில் ஒரு லட்சம் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை; புதிய சாதனைக்கு தயாராகும் ஹூண்டாய் & கியா
ஹூண்டாய் மற்றும் அதன் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ், அக்டோபர் மாத இறுதிக்குள் 1,00,000க்கும் அதிகமான மின்சார வாகனங்களைற்பனை செய்யும் முக்கிய மைல்கல்லைத் தாண்டும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனங்கள் வழங்கிய சமீபத்திய தரவுகளிலிருந்து இந்த கணிப்பு வருகிறது. இது இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 91,348 யூனிட்களின் மொத்த விற்பனை எண்ணிக்கையைக் காட்டுகிறது. 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது எலக்ட்ரிக் கார்களின் விற்பனையில் 30.3% அளவிலான மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் விற்பனை 4.5% வளர்ச்சியடைந்து, மொத்தம் 48,297 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மறுபுறம், கியா அதன் எலக்ட்ரிக் வாகன விற்பனையில் 80.3% வளர்ச்சியுடன் 43,051 யூனிட்களை எட்டியது.
எலக்ட்ரிக் கார் விற்பனை இலக்கு
இந்த இரண்டு தென் கொரிய வாகன உற்பத்தியாளர்களின் ஒருங்கிணைந்த எலக்ட்ரிக் வாகன விற்பனை இந்த மாதம் 100,000ஐ தாண்டுவது மட்டுமல்லாமல், ஆண்டின் இறுதியில் 1,20,000 யூனிட்களை எட்டும் என்று சந்தை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கிடையே, ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது எலக்ட்ரிக் வாகன வரம்பை மாஸ் மற்றும் பிரீமியம் பிரிவுகளில் விரிவுபடுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கம் உள்ளூர்மயமாக்கப்பட்ட விநியோகச் சங்கிலியால் ஆதரிக்கப்படும், பிரபலமான க்ரெட்டா எஸ்யூவியின் மின்சார பதிப்பு இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும். மேலும் நான்கு எலக்ட்ரிக் வாகன மாடல்கள் வரும் ஆண்டுகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநரான அன்சூ கிம், நிறுவனத்தின் ஐபிஓவுக்கு முன்னதாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.