புதிய 'IONIQ 7' எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை உருவாக்கி வரும் ஹூண்டாய்
இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் தங்களது மேம்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் எஸ்யூவியான அயானிக் 5 (IONIQ 5) மாடலை ரூ.45 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டது ஹூண்டாய். அதனைத் தொடர்ந்து தற்போது புதிய அயானிக் 7 (IONIQ 7) எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவம். கியா EV9 மாடலை அடிப்படையாகக் கொண்ட இந்த அயானிக் 7 மாடலின் தயாரிப்பு வடிவத்தை ஜெர்மன் சாலைகளில் ஹூண்டாய் சோதனை செய்து வருததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், அயானிக் 5-ன் சில டிசைன் எலமண்ட்களை அயானிக் 7-லும் ஹூண்டாய் பயன்படுத்தியிருக்கிறது.
ஹூண்டாய் அயானிக் 7: என்ன எதிர்பார்க்கலாம்?
அயானிக் 5, கியா EV6 மற்றும் கியா EV9 உள்ளிட்ட கார்களின் கட்டமைப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட அதே e-GMP பிளாட்ஃபார்மையே புதிய அயானிக் 7 மாடலுக்கும் பயன்படுத்தியிருக்கிறது ஹூண்டாய். கியா EV9-ன் பவர்ட்ரெயின் தேர்வுகளையே புதிய மூன்று வரிசை சீட்களைக் கொண்ட அயானிக் 7 மாடலிலும் ஹூண்டாய் பயன்படுத்தியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அயானிக் 7-ன் அடிப்படை வேரியன்டில், 76.1kWh பேட்டரி பேக்கும், ரியர் மவுண்டட் எலெக்ட்ரிக் மோட்டாரும் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதன் லாங் ரேஞ்சு வேரியன்டில் 99.8kWh பேட்டரி பேக்கும், சிங்கிள் சார்ஜூக்கு 400கிமீ ரேஞ்சு தரக்கூடிய வகையிலான எலெக்ட்ரிக் மோட்டாரும் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.