ஹேண்டில் லாக்கில் கோளாறு! இந்தியாவில் 96 ஹோண்டா ரெபல் 500 பைக்குகளைத் திரும்பப்பெறுகிறது ஹோண்டா
செய்தி முன்னோட்டம்
ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 96 ஹோண்டா ரெபல் 500 பைக்குகளை விருப்பத்தின் பேரில் திரும்பப் பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகளாவிய திரும்பப்பெறுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, ஏப்ரல் 2025 முதல் ஆகஸ்ட் 2025 வரை உற்பத்தி செய்யப்பட்ட மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
காரணம்
திரும்பப்பெறப்படுவதற்கான தொழில்நுட்பக் காரணம்
ஹோண்டா நிறுவனத்தின் தகவல்படி, குறிப்பிட்ட இந்த கால கட்டத்தில் தயாரிக்கப்பட்ட ரெபல் 500 பைக்குகளின் ஹேண்டில் லாக் பொருத்தப்படும் ஸ்க்ரூ, தயாரிப்பு வரிசையில் சரியான டார்க்கில் முடுக்கப்படாமல் போயிருக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, பைக் இயங்கும் போது ஏற்படும் அதிர்வுகளால் அந்த ஸ்க்ரூ நாளடைவில் தளர்ந்து, ஸ்டீயரிங் இயக்கத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
இருப்பினும், இந்தியாவில் இதுவரை இதனால் எந்த அசம்பாவிதமும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலவச சேவை
இலவச பழுதுபார்ப்பு சேவை எப்போது தொடங்கும்?
பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கான பழுதுபார்ப்பு மற்றும் பாகங்கள் மாற்றும் பணிகள் 2026 நவம்பர் முதல் வாரத்தில் இருந்து ஹோண்டாவின் பிரீமியம் பிக்விங் ஷோரூம்கள் மூலம் தொடங்கவுள்ளன.
பைக்கின் உத்தரவாதக் காலம் முடிந்திருந்தாலும், ஹேண்டில் லாக் ஸ்க்ரூ முற்றிலும் இலவசமாகவே மாற்றப்படும்.
பாதிக்கப்பட்ட பைக் உரிமையாளர்களைத் தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக ஹோண்டா பிரதிநிதிகள் நேரடியாகத் தொடர்புகொள்வார்கள்.
எப்படி தெரிந்துகொள்வது?
உங்கள் பைக் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்ப்பது எப்படி?
வாடிக்கையாளர்கள் தங்களது ஹோண்டா ரெபல் 500 பைக் இந்த திரும்பப்பெறுதலில் இடம் பெற்றுள்ளதா என்பதை ஆன்லைன் வழியிலேயே மிக எளிதாக சரிபார்க்கலாம்:
ஹோண்டா 2-வீலர்ஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (honda2wheelersindia.com) உள்ள Recall Campaign பிரிவிற்கு செல்ல வேண்டும்.
உங்கள் பைக்கின் 17 இலக்க வாகன அடையாள எண்ணை (VIN / Chassis Number) உள்ளிட வேண்டும்.
உங்கள் பைக் பாதிக்கப்பட்ட பட்டியலின் கீழ் இருந்தால், அருகில் உள்ள ஹோண்டா பிக்விங் மையத்தைத் தொடர்புகொண்டு பழுதுபார்ப்பதற்கான நேரத்தை பதிவு செய்து கொள்ளலாம்.