ஜப்பானில் ஹோண்டாவின் புதிய WR-Vயாக அறிமுகமாகும் இந்தியாவில் வெளியான எலிவேட் எஸ்யூவி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தங்களுடைய புதிய எஸ்யூவியான 'எலிவேட்'டை (Elevate) வெளியிட்டது ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா. இந்தியாவில் வெளியிடப்பட்ட இந்த மாடலை. ஜப்பானில் அடுத்த தலைமுறை WR-V மாடலாக ஹோண்டா அறிமுகப்படுத்தவிருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் புதிய தலைமுறை WR-Vயின் விற்பனை ஜப்பானில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தபுக்காரா தொழிற்சாலையிலேயே புதிய WR-V மாடலை தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறது ஹோண்டா. அந்த தொழற்சாலையிலிருந்தே ஜப்பானுக்கும் இந்தப் புதிய மாடலை ஏற்றுமதி செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு காரை ஹோண்டா ஏற்றுமதி செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோண்டாவின் புதிய WR-V எஸ்யூவி:
சின்னச் சின்ன வசதிகள் மாற்றத்தைத் தவிர இந்தியாவில் வெளியிடப்பட்ட எலிவேட்டும், ஜப்பானில் வெளியாகவிருக்கும் WR-V-யும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. இரண்டிலுமே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எலிவேட்டில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் டேஷ்போர்டு அக்சன்ட், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகிய வசிகள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், WR-V-யில் அந்த வசதிகள் இல்லை. ஆனால், அதற்கு மாற்றாக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை WR-Vயில் அளித்திருக்கிறது ஹோண்டா. இந்தியாவில் ரூ.11 லட்சம் முதல் 16 லட்சம் வரையிலான விலைகளில் எலிவேட் எஸ்யூவி வெளியான நிலையில், ஜப்பானிலும் இந்திய மதிப்பையொட்டிய விலையிலேயே புதிய WR-V மாடலை வெளியிடவிருக்கிறது ஹோண்டா.