இந்தியாவில் புதிய எலிவேட் எஸ்யூவியை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா
கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய எலிவேட் எஸ்யூவியை இன்று இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. நான்கு ட்ரிம்களில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் ஏழு வேரின்ட்களாக புதிய எலிவேட் எஸ்யூவியை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். அடிப்படையான SV வேரியன்டில் தொடங்கி, V, VX மற்றும் ZX என நான்கு ட்ரிம்களைக் கொண்டிருக்கிறது ஹோண்டா எலிவேட். ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸூகி கிராண்டு விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரடைர், எம்ஜி ஆஸ்டர், கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வாகன் டைகூன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய எஸ்யூவிகளுக்குப் போட்டியாக இந்தப் புதிய எலிவேட் எஸ்யூவியை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
ஹோண்டா எலிவேட்: இன்ஜின் மற்றும் விலை
புதிய எலிவேட்டில் 121hp பவர் மற்றும் 145Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, நான்கு சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொடுத்திருக்கிறது ஹோண்டா. இதே இன்ஜினையே தங்களுடைய செக்மெண்ட் ஃபேவரைட் சிட்டி மாடலிலும் ஹோண்டா பயன்படுத்தியிருக்கிறது. மேலும், மேற்கூறிய இன்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு CVT ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் ரூ.11 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி, ரூ.16 லட்சம் எக்ஸ்-ஷோரூம் வரையிலான விலையில் புதிய ஹோண்டா எலிவேட் எஸ்யூவியை விற்பனை செய்யவிருக்கிறது ஹோண்டா. எலிவேட்டின் அடிப்படை வேரியன்டான SV மேனுவல் வேரியன்ட் ரூ.11 லட்சம் விலையிலும், டாப் எண்டான ZX ஆட்டோமேட்டிக் வேரியன்ட் ரூ.16 லட்சம் விலையிலும் வெளியாகியிருக்கின்றன.