இந்தியாவிற்கான புதிய மிட்சைஸ் எஸ்யூவி.. ஜூன் மாதம் அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா!
இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டு வரும் புதிய மிட்சைஸ் எஸ்யூவியை ஜூன் மாதம் 6-ம் தேதி சர்வதேச சந்தைகளுக்கும் சேர்த்து அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது ஹோண்டா. 'எலிவேட்' எனப் பெயரிடப்பட்ட இந்த புதிய எஸ்யூவியை வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவிலும், அதனைத் தொடர்ந்து மற்ற நாடுகளிலும் விற்பனைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது ஹோண்டா. பெரும் போட்டியாளர்களான கிரெட்டா, செல்டோஸ், கிராண்டு விட்டாரா, ஹைரைடர், டைகூன் மற்றும் குஷாக் ஆகிய மாடல்கள் நிறைந்திருக்கும் மிட்சைஸ் எஸ்யூவி செக்மண்டில் இந்த புதிய மாடலைக் கொண்டு கால்பதிக்கிறது ஹோண்டா. ஹோண்டாவின் சிட்டி மாடலை உருவாக்கிய அதே பிளாட்ஃபார்மில் தான் இந்தப் புதிய மாடலையும் அந்நிறுவனம் உருவாக்கி வருகிறது.
என்ன எதிர்பார்க்கலாம்?
4.2 முதல் 4.3 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் புதிய எஸ்யூவியில், ஹோண்டா சிட்டியில் பயன்படுத்தப்பட்ட அதே ட்வின் கேம் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டிருகிறதாம். மேலும், வெளியீட்டின் போதும் இந்த ஒரே இன்ஜின் ஆப்ஷனுடனே வெளியாகவிருக்கிறது புதிய எஸ்யூவி. இந்த மாடல் வெளியான பின்பு ஹைபிரிட் மாடல் ஒன்றும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலில் டீசல் வேரியன்ட் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியர்பாக்ஸூம் சிட்டியில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் தான். இந்தப் புதிய மாடலை ரூ.12 - ரூ.19 லட்சம் விலையில் ஹோண்டா வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.