இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் புதிய 'எலிவேட்'.. என்னென்ன வசதிகள்?
சர்வதேச சந்தைகளுக்கான தங்களது புதிய எலிவேட் எஸ்யூவியை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா. ஜூலை மாதம் இந்த புதிய எஸ்யூவிக்கான முன்பதிவு தொடங்கும் எனவும், அதனைத் தொடர்ந்து இந்தியாவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருக்கிறது ஹோண்டா. இந்த எலிவேட்டின் என்ட்ரியுடன் மீண்டும் எஸ்யூவி செக்மண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது ஹோண்டா. வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் HR-V மற்றும் CR-V-யின் தோற்றத்தை ஒத்திருக்கிறது, புதிய எலிவேட்டின் டிசைன். இந்த எலிவேட்டில் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் ஹைபீம் அசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கொடுத்திருக்கிறது ஹோண்டா.
இன்ஜின் மற்றும் வசதிகள்:
ஹோண்டா சிட்டி உருவான அதே குளோபல் ஸ்மால் கார் பிளாட்ஃபார்மில் தான் இந்த எலிவேட் எஸ்யூவியையும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்ஜினும் சிட்டியில் பயன்படுத்தப்பட்டிருக்கும், 121hp பவர் மற்றும் 145Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, நான்கு சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தான். இந்த இன்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களைக் கொடுத்திருக்கிறது ஹோண்டா. அடுத்து வரும் மாதங்களில் ஹைபிரிட் வேரியன்ட் ஒன்றையும் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது ஹோண்டா. அடுத்த மூன்று வருடத்தில் முழுவதுமான எலெக்ட்ரிக் எலிவேட் ஒன்றையும் உருவாக்கி வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது அந்நிறுவனம். தற்போது இதன் விலையை அந்நிறுவனம் வெளியிடவில்லை. சில மாதங்களில் இதன் வெளியீட்டின் போது விலையும் வெளியடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.