3 கோடி விற்பனை மைல்கல்லை எட்டி சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா
இந்தியாவில் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் மிகவும் நம்பகமான ஸ்கூட்டராக வலம் வருவது ஹோண்டா ஆக்டிவா தான். தற்போது, விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது ஆக்டிவா ஸ்கூட்டர். 2001-ல் முதன் முதலில் வெளியிடப்பட்ட ஹோண்டா ஆக்டிவா, தற்போது 3 கோடி விற்பனையை எட்டி புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. மேலும், 22 ஆண்டுகள் என்ற குறைந்த காலத்தில் இத்தகைய சாதனையைப் படைத்திருக்கிறது ஆக்டிவா. பெரிய அளவில் வசதிகள் இல்லை என்றாலும், ஸ்டைலான அதன் லுக்கும், நல்ல பெர்ஃபாமன்ஸுமே இந்த மைல்கல்லை எட்டியதற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது. 2015-ல் ஒரு கோடி விற்பனை மைல்கல்லை எட்டி ஆக்டிவா, அடுத்த ஏழே ஆண்டுகளில் 3 கோடி விற்பனை என்ற மைல்கல்லை எட்டியிருக்கிறது.
ஹோண்டா ஆக்டிவா: கடந்து வந்த பாதை
2001-ம் தங்களுடைய முதல் 100சிசி ஸ்கூட்டராக ரூ.36,000 விலையில் இந்தியாவில் ஆக்டிவா ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது ஹோண்டா. வெளியான முதல் ஆண்டில் மட்டும் 55,000 ஸ்கூட்டர்கள் விற்பனையானது. 2009-ல் நிறைய மாற்றங்கள் மற்றும் புதிய வசதிகளுடன் இரண்டாம் தலைமுறை ஆக்டிவாவை அறிமுகப்படுத்தியது ஹோண்டா. 2015-ல் ஹீரோவுடன் போட்டியிடுவதற்கு மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஆக்டிவா 3G மாடலை வெளியிட்டது ஹோண்டா. அதனைத் தொடர்ந்து, 125சிசி மாடல், BS-க்கு ஏற்ப இன்ஜின் மாற்றங்களுடன் புதிய மாடல், கூடுதலாக ஸ்பெஷல் எடிஷன் என பல்வேறு ஆக்டிவா மாடல்களை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. 2023-ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட ஆக்டிவா மாடலை சமீபத்தில் தான் வெளியிட்டது ஹோண்டா. டிவிஎஸ் ஜூப்பிட்டர் மற்றும் ஹீரோ மாஸ்ட்ரோ எட்ஜ் ஆகிய மாடல்களுடன் போட்டியிட்டு வருகிறது ஆக்டிவா.