அனைத்து கார்களுக்கும் இரண்டாவது முறை விலை உயர்வை அறிவித்துள்ளது ஹோண்டா
ஹோண்டா நிறுவனம், ஏப்ரல் மாதம் முதல் அதன் முழு வரம்பிலும் விலைகளை உயர்த்துவதற்கான திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது. முன்னதாக ஜனவரியில் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டதை தொடர்ந்து, இந்த ஆண்டு, இரண்டாவது முறையாக விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது ஹோண்டா நிறுவனம். இந்த விலை உயர்வு, சிட்டி மற்றும் அமேஸ் செடான் மற்றும் புதிய எலிவேட் எஸ்யூவியின் விலையை பாதிக்கும். எனினும், எவ்வளவு விலை உயரவுள்ளது என இந்த ஜப்பானிய கார் நிறுவனத்தால் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மார்ச் 2024க்கான சிறப்புச் சலுகைகளையும் ஹோண்டா வெளியிடுகிறது
தற்போது, ஹோண்டாவின் மிகவும் மலிவான மாடலான அமேஸ், ரூ.7.16 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. அதேபோல, எலிவேட்டின் விலை, ரூ.11.58 லட்சத்திற்கும். சிட்டியின் ஆரம்ப விலை ரூ.11.71 லட்சம். e:HEV-யின் ஆரம்ப விலை ரூ. 18.89 லட்சம் (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்). விலை உயர்வுக்கு முன்னோட்டமாக, மார்ச் மாதத்திற்கான சிறப்பு சலுகைகளை ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது. எலிவேட் மாடல் ரூ. 50,000 வரை தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது. அமேஸ் காம்பாக்ட் செடானுக்கு, வாடிக்கையாளர்கள் ரூ.90,000 வரை பலன்களைப் பெறலாம். இதற்கிடையில், ஹோண்டா சிட்டியில் அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது.