அப்டேட் செய்யப்பட்ட 'எக்ஸ்ட்ரீம் 160R 4V' மாடலை வெளியிட்டது ஹீரோ
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டிருந்த எக்ஸ்ட்ரீம் 160R 4V மாடல் பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹீரோ. மூன்று வேரியன்ட்களாக பல்வேறு புதிய மாற்றங்களுடனும், இன்ஜின் அப்டேட்டுடனும் இந்த பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹீரோ. மூன்று வேரியன்ட்களில், ப்ரோ வேரின்டில் மட்டும் முன்பக்கம் USD ஃபோர்க்கும், பின்பக்கம் 7-ஸ்டெப் ப்ரீலோடு அட்ஜஸ்டபிள் ஷோவா மோனோஷாக் சஸ்பென்ஷனும் பயன்படுத்தியிருக்கிறது ஹீரோ. மற்ற இரு வேரியன்ட்களிலும் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷனைப் பயன்படுத்தியிருக்கிறது. முழுதுமாக மறுவடிவம் செய்யப்பட்ட எல்இடி முகப்புவிளக்குகளுடன், எக்ஸ்பல்ஸ் 4V-யில் பயன்படுத்தப்பட்டுள்ள ஸ்விட்ச்கியரையும் பெற்றிருக்கிறது புதிய எக்ஸ்ட்ரீம் 160R. மேலும், கால் மற்றும் நோட்டிபிகேஷன் அலர்ட் கொண்ட, ப்ளூடூத் வசதியுடன் கூடிய நெகடிவ் LCD டிஸ்பிளேவை புதிய எக்ஸ்ட்ரீமில் கொடுத்திருக்கிறது ஹீரோ.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V: இன்ஜின் மற்றும் விலை
புதிய எக்ஸ்ட்ரீமில் பெரிய மாற்றம் என்றால் அது இன்ஜின் தான். 16.9hp பவர் மற்றும் 14.5Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, நான்கு வால்வுகள் மற்றும் சிங்கிள் சிலிண்டர் கொண்ட, ஏர்-கூல்டு 163சிசி இன்ஜினைப் பெற்றிருக்கிறது புதிய எக்ஸ்ட்ரீம் 160R. இந்த இன்ஜினில் ஏர்-கூலர் வசதியுடன் புதிதாக ஆயில்-கூலரையும் ஹீரோ இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய எக்ஸ்ட்ரீம் 160R 4V-யின் ஸ்டாண்டர்டு வேரியன்ட்டை ரூ.1.27 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், கனெக்டட் வேரியன்ட்டை ரூ.1.32 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ப்ரோ வேரியன்ட்டை ரூ.1.36 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியிட்டிருக்கிறது ஹீரோ. இன்று முதல் இந்த மாடலுக்கான முன்பதிவும், ஜூலை இரண்டாம் வாரம் முதல் டெலிவரியும் துவங்குகிறது.