இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள புதிய கோரிக்கைகளை முன்வைத்திருக்கும் டெஸ்லா
எலான் மஸ்கின் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்கவிருப்பதாகவும், அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் தங்களது எலெக்ட்ரிக் கார் விற்பனையை அந்நிறுவனம் தொடங்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இந்தியாவில் டெஸ்லா விற்பனை செய்யவிருக்கும் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரிச்சலுகை மற்றும் டெஸ்லா மேற்கொள்ளவிருக்கும் முதலீடுகள் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் முழுமையாக இறக்குமதி செய்யப்படும் கார்களின் மதிப்பைப் பொருத்து அவற்றின் மீது இறக்குமதி வரி விதித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி, 40,000 டாலர்கள் அல்லது அதற்கு மேற்கபட்ட மதிப்புடைய கார்களுக்கு 100% இறக்குமதி வரியும், அதற்குட்பட்ட மதிப்புடைய கார்களுக்கு 70% இறக்குமதி வரியும் விதிக்கப்பட்டு வருகிறது.
டெஸ்லாவின் கோரிக்கை:
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் புதிய தொழிற்சாலை அமைத்து முதலீடு செய்ய முன்வந்தால், தொடக்க காலத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரியில் சலுகை அளிப்பதாகத் தெரிவித்தது மத்திய அரசு. அதன்படி, 15% முதல் 30% வரை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கான கார்களின் வரியை குறைக்கவும் திட்டமிட்டு வருகிறது. ஆனால் தற்போது, முதல் இரண்டு வருடங்களில் 12,000 கார்கள் வரை வரிச்சலுகை அளித்தால் இந்தியாவில் 500 மில்லியன் டாலர்கள் முதலீடும், 30,000 கார்கள் வரை வரிச்சலுகை அளித்தால் 2 பில்லியன் டாலர்கள் முதலீடும் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவன தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், வரிச்சலுகையுடன் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் அளவைக் குறைப்பதற்கான வழிகளை மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.