Loading...
இப்படி செய்தால் E20 பெட்ரோல் போட்டால் கார் இன்ஜின் பழுதாகாது: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்
E20 பெட்ரோல் வாகனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டைப் பாதிக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

இப்படி செய்தால் E20 பெட்ரோல் போட்டால் கார் இன்ஜின் பழுதாகாது: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 30, 2026
10:23 am

செய்தி முன்னோட்டம்

2016-க்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய பிஎஸ்-III (BS-III) வாகனங்களில் E20 பெட்ரோல் பயன்படுத்தும் போது, அவற்றின் சில ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கட்களை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றும், ஆனால் இது வாகனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டைப் பாதிக்காது என்றும் மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி ஏ.ஏ. ரஹீம் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர் நிதின் கட்கரி, IOCL, IIP, SIAM மற்றும் ARAI ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வுகளின் விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஆய்வு

ஆய்வு அறிக்கை கூறுவது:

E20 பெட்ரோல் பயன்பாட்டினால் பிஎஸ்-6 (BS-VI) வாகனங்களின் உமிழ்வு அளவிலோ அல்லது இன்ஜின் திறனிலோ எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

பழைய வாகனங்களில் கூட ஓட்டுநர் வசதி, இன்ஜின் ஸ்டார்ட் ஆவதில் சிரமம் அல்லது உலோக மற்றும் பிளாஸ்டிக் பாகங்களின் இணக்கத்தன்மையில் எந்தப் பிரச்சினையும் பதிவாகவில்லை.

எனவே, E20 பெட்ரோலுக்கு மாற வாகன இன்ஜின்களில் எந்தவித மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை.

எனினும் 2005 ஏப்ரல் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு 2016-க்கு முன்னர் தயாரிக்கப்பட்ட பிஎஸ்-III வாகனங்களில் மட்டும் தொடர்ச்சியான E20 பயன்பாட்டினால் சில ரப்பர் பாகங்கள் தேய்மானம் அடைய வாய்ப்புள்ளது.

இருப்பினும், வழக்கமான வாகன சர்வீஸ் செய்யும் போதே இந்த பாகங்களை மிக எளிதாக மாற்றிக்கொள்ள முடியும் என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

மைலேஜ்

மைலேஜ் குறைவு புகார்களுக்கு பதில்

எத்தனால் கலந்த பெட்ரோலால் மைலேஜ் குறைகிறது என்ற புகார்களுக்குப் பதிலளித்த அரசு, வாகனத்தின் எரிபொருள் சிக்கனம் என்பது பெட்ரோல் வகையை மட்டும் சார்ந்தது அல்ல என்றும், ஓட்டும் முறை, முறையான பராமரிப்பு, டயர் காற்று அழுத்தம், போக்குவரத்து நெரிசல் மற்றும் ஏசி பயன்பாடு ஆகிய பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அமைகிறது என்றும் கூறியுள்ளது.

ADVERTISEMENT