
E20 எரிபொருளால் வாகன மைலேஜ் 2-5% குறையலாம்: வாகனத்துறை நிபுணர்கள் உறுதி
செய்தி முன்னோட்டம்
20% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு (E20) வாகனங்கள் மாறுவதால், வாகனங்களின் எரிபொருள் திறன் 2 முதல் 5 சதவிகிதம் வரை குறையக்கூடும் என்று வாகனத் துறை வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். E20 எரிபொருளின் தாக்கம் குறித்து சமூக ஊடகங்களில் விவாதம் நடந்து வரும் நிலையில், வாகன உற்பத்தியாளர்களுடன் பணிபுரியும் பொறியாளர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர். மைலேஜ் குறைய முக்கியக் காரணம், சுத்தமான பெட்ரோலை விட எத்தனால் குறைந்த கலோரி மதிப்பைக் (குறைந்த ஆற்றல் உள்ளடக்கம்) கொண்டிருப்பதுதான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து எண்ணெய் அமைச்சகம் ஒரு கடுமையான குறைப்பு ஏற்படாது என்று தெளிவுபடுத்தியிருந்தாலும், E10க்காக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு 1-2% குறையும் என்றும் மற்ற வாகனங்களுக்கு 3-6% குறையலாம் என்றும் முன்பு மதிப்பிட்டிருந்தது.
பாதிப்பு
உடனடி பாதிப்பு ஏற்படாது
E20-க்கு இணக்கமான (E20 compliant) வாகனங்களுக்கு, என்ஜின் பாகங்களில் உடனடி பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று வல்லுநர்கள் உறுதியளிக்கின்றனர். இருப்பினும், E20-க்கு இணக்கமற்ற பழைய வாகனங்களில், நீண்ட காலத்தில் கேஸ்கெட்டுகள், ரப்பர் குழாய்கள் மற்றும் எரிபொருள் குழாய்களில் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். E20 கலப்புத் திட்டம், கரும்பில் இருந்தோ அல்லது மக்காச்சோளத்தில் இருந்தோ எத்தனாலை எடுத்து பெட்ரோலில் கலப்பதன் மூலம் கார்பன் உமிழ்வைக் குறைப்பதையும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு தேசியத் திட்டமாகும். E20க்குத் தயார் செய்யப்பட்ட வாகனங்கள், எத்தனாலின் பண்புகள் காரணமாகச் சிறந்த முடுக்கத்தை (Acceleration) வழங்க முடியும் என்றும் மத்திய அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.