
'டாடா சுமோ', தங்கள் நிறுவன ஊழியரின் பெயரையே கார் மாடலுக்கு சூட்டிய டாடா
செய்தி முன்னோட்டம்
டாடா மோட்டார்ஸின் மிகவும் வெற்றிகரமான கார் மாடலான டாடா சுமோவைப் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். 1990-களில் இந்தியாவில் அறிமுகப்படுத்த டாடா சுமோ 2019-லேயே விற்பனையில் இருந்து விடை பெற்றது. இந்த டாடா சுமோவின் பெயர் காரணம் பற்றித் தெரியுமா?
டாடா நிறுவனத்தில் பணியாற்றிய அந்நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான சுமந்த் மூல்காவ்காரின் பெயரையே தங்கள் கார் மாடலுக்கு சூட்டியது டாடா.
அன்றைய காலம் டாடா நிறுவனத்தின் மேலதிகாரிகள் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு அருந்துவது வழக்கம். ஆனால், சுமந்த் மூல்காவ்கார் மட்டும் அந்த மதிய உணவுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியே சென்று விடுவாராம். வெளியே செல்லும் அவர் பலமணி நேரம் கழித்தே அலுவலகம் வருவாராம்.
டாடா
டாடாவின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சுமந்த் மூல்காவ்கார்:
பெரிய நட்சத்திர உணவகத்தில் அவர் உணவருந்தி விட்டு வருவதாகவே பலரும் நினைத்து வந்தார்கள். ஒரு நாள் அவர் எங்கு செல்கிறார் என அவர் பின்னாலேயே சென்று நோட்டமிட்டிருக்கிறார்கள்.
அப்போது, சற்று தொலைவில் உள்ள சிறிய தாபா ஒன்றில் லாரி ஓட்டுநர்களுடன் அமர்ந்து அவர் உணவருந்துவதைப் பார்த்திருக்கிறார்கள்.
லாரி ஓட்டுநர்களுடன் அமர்ந்து உணவருந்து சுமந்த், அவர்களின் உரையாடலை கவனித்தும் அவர்களுடன் கலந்துரையாடியும், தங்கள் வாகனம் எப்படி இருக்கிறது, அதில் என்ன குறைகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டு, அதனை ஆராய்ச்சிக் குழுவுடன் பகிர்ந்து, வாகனத்தை மேம்படுத்துவதற்கு உதவி செய்திருக்கிறார்.
அவரது இந்த முயற்சி டாடாவின் பல்வேறு வெற்றிகளுக்கும் வித்திட்டிருக்கிறது . எனவே தான் அவருடைய பெயரை தங்களுடைய கார் மாடலுக்கு சூட்டியது டாடா நிறுவனம்.