ஒற்றை சார்ஜில் 400 கி.மீ. பறக்கும் 19 இருக்கை மின்சார விமானம்: சீனாவில் 'CE-25A' விமானப் பரிசோதனை வெற்றி
செய்தி முன்னோட்டம்
சீனாவில் முதன்முறையாக மனிதர்களால் இயக்கப்பட்ட மின்சார விமான பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. முழுமையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள CE-25A என்ற இந்த மின்சார விமானத்தின் சோதனை வெற்றி, உலக விமான போக்குவரத்துத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. சீனாவின் வணிக விமானக் கழகம், சீனா ஏவுவாகன தொழில்நுட்பக் கழகம் மற்றும் ஷாங்காய் ஜியாடோங் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.
விவரங்கள்
ஷான்டாங் மாகாணத்தில் நடந்த சோதனை ஓட்டத்தின் விவரங்கள்
கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி ஆளில்லாமல் முதல்முறையாக பறக்கவிடப்பட்டு சோதனை செய்யப்பட்ட இந்த விமானம், சனிக்கிழமை அன்று கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் மனிதர்கள் மூலம் இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
சோதனையின்போது விமானத்தில் 2 விமானிகள் மற்றும் ஒரு விமான சோதனைப் பொறியாளர் என மொத்தம் 3 பேர் பயணித்தனர்.
மொத்தம் 57 நிமிடங்கள் 46 விநாடிகள் நீடித்த இந்தப் பரிசோதனையின்போது, விமானம் 16 நிமிடங்களுக்கும் மேலாக வானில் பறந்து 60.4 கி.மீ. தூரத்தை கடந்தது.
அனைத்து செயல்பாட்டு அளவுகோல்களும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பம்சங்கள்
CE-25A மின்சார விமானத்தின் சிறப்பம்சங்கள்
நகரங்களுக்கு இடையேயான குறுகிய தூர போக்குவரத்தை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில் அதிகபட்சமாக 19 பயணிகள் வரை பயணிக்க முடியும்.
இது மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது; மேலும் ஒற்றை சார்ஜில் 400 கி.மீ.தூரம் வரை தடையின்றிப் பயணிக்க முடியும்.
தன் அதிகபட்ச டேக்-ஆஃப் எடை 10 டன்கள் ஆகும்.
சீனாவின் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் இந்த விமானத்தின் வடிவமைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், வணிக ரீதியான பயன்பாட்டிற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு இந்தத் திட்டம் நகர்ந்துள்ளது.