2024ல் இந்தியாவில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் புதிய கார்கள் மற்றும் ஃபேஸ்லிப்ட்கள்
2024ம் ஆண்டில் பல்வேறு புதிய கார்களையும், விற்பனையில் இருக்கும் கார்களுக்கான அப்டேட்களையும் வழங்கத் தயாராகி வருகின்றன இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள். தற்போது இந்திய வாடிக்கையாளர்களின் முதன்மையான சாய்ஸ் எஸ்யூவிக்கள் தான் என்பதால், 2024ல் அதிகம் எஸ்யூவிக்களுக்கே முதலிடம் கொடுக்கவிருக்கின்றன கார் தயாரிப்பு நிறுவனங்கள். இதோ 2024ல் இந்தியாவில் வெளியாகவிருக்கும் கார்களின் லைன்அப். மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஃபேஸ்லிப்ட்: வெளிப்புற மற்றும் உட்புற டிசைன் மாற்றங்களோடு, சில புதிய வசதிகளையும் கொண்டு 2024ல் வெளியாகவிருக்கிறது மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஃபேஸ்லிஃப்ட். தற்போது இருக்கும் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் மாற்றம் இருக்காது என்றாலும், புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஒன்றை ஃபேஸ்லிஃப்டில் மஹிந்திரா அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிப்ட்:
மார்ச் 2020-ல் இந்தியாவில் அறிமுகமான க்ரெட்டாவின் இரண்டாம் தலைமுறை மாடல் தற்போது விற்பனையில் இருக்கிறது. அந்த மாடலின் முக்கியமான அப்டேட்களைக் கொண்ட ஃபேஸ்லிப்ட் ஒன்றை, வரும் ஆண்டில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஹூண்டாய். வெளிப்புற மற்றும் உட்புற டிசைன் மாற்றங்களுடன், ADAS பாதுகாப்பு அம்சங்களையும் புதிய க்ரெட்டாவில் ஃபேஸ்லிப்டில் நாம் எதிர்பார்க்கலாம். கியா சோனெட் ஃபேஸ்லிப்ட்: 2024 தொடக்கத்திலேயே தங்களது சோனெட் எஸ்யூவியின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது கியா. கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் வெளியாகவிருக்கிறது சோனெட். தற்போது இருக்கும் டர்போ பெட்ரோல், பெட்ரோல் மற்றும் டீசல் என அனைத்து இன்ஜின் தேர்வுகளுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
டாடாவின் புதிய எலெக்ட்ரிக் கார்கள்:
டாடாவின் பிரபலமான பன்ச் மற்றும் ஹேரியர் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை 2024ம் ஆண்டிலேயே வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டாடா. ஜென் 2 சிக்மா பிளாட்ஃபார்மில் பன்ச் EV-யும், ஓமேகா பிளாட்ஃபார்மில் ஹேரியர் EV-யையும் உருவாக்கவிருக்கிறது டாடா. பன்ச் EV-யானது 300கிமீ ரேஞ்சைக் கொண்டிருக்கவிருக்கும் நிலையில், ஹேரியிர் EV-யில் லாங் மற்றும் ஷார்ட் என இரண்டு ரேஞ்சு வேரியன்ட்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது டாடா. புதிய மாருதி சுஸூகி ஸ்விப்ட்: சமீபத்தில் நடைபெற்று முடந்த ஜப்பான மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட நான்காம் தலைமுறை ஸ்விப்ட் ஹேட்ச்பேக் மாடலை 2024-ல் இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது மாருதி சுஸூகி. புதிய 1.2-லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் இன்ஜின் கொண்ட மாடலை இந்திய சாலைகளில் தற்போதே சோதனை செய்து வருகிறது மாருதி.