விரைவில் மேலும் ஒரு சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் வெளியீடு: பஜாஜ் ஆட்டோ சிஇஓ தகவல்
இந்திய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, சுற்றுச்சூழல் மாசில்லாத ஆற்றல் வாகனங்களை வெளியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பஜாஜ் ஆட்டோவின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் பஜாஜ் தெரிவிக்கையில், நிறுவனம் விரைவில் மற்றொரு சிஎன்ஜி மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளது என்றார். பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்படுத்திய ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மூலம் இயங்கும் உலகின் முதல் மோட்டார் சைக்கிள் என்ற சாதனை புடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், பஜாஜ் ஆட்டோ வரும் மாதத்தில் எத்தனால் எரிபொருள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களைக் காட்சிப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது மற்றும் இந்த வாகனங்களின் சந்தை அறிமுகம் இந்த நிதியாண்டிற்குள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட தயாராகி வரும் பஜாஜ் ஆட்டோ
அறிக்கையின்படி, நிறுவனம் நடப்பு நிதியாண்டிற்குள் பட்ஜெட்டுக்கு ஏற்ற மற்றும் உயர்நிலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட தயாராகி வருகிறது. புதிய சேடக் இயங்குதளம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சிகள் பஜாஜ் ஆட்டோவின் பெரிய நோக்கத்தின் ஒரு பகுதியாகும் என்று அந்த அறிக்கை மேலும் கூறியது. நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்து பேசிய ராஜீவ் பஜாஜ், "இந்த பண்டிகை காலத்துக்குள் 1,00,000 சிஎன்ஜி எரிசக்தி வாகனங்களின் மாதாந்திர விற்பனை மற்றும் உற்பத்தியை அடையும் விளிம்பில் உள்ளோம்." என்று கூறினார். 2 கிலோ சிஎன்ஜி சிலிண்டர் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்ட ஃப்ரீடம் 125, 330கிமீ வரை செல்லக்கூடிய வரம்பைக் கொண்டுள்ளது. இதுவரை, 2,000 யூனிட்கள் அனுப்பப்பட்டுள்ளன.