
புதிய எலக்ட்ரிக் வாகன துணை பிராண்டின் கீழ் ஆடி இ5 ஸ்போர்ட்பேக் அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
ஆடி நிறுவனத்தின் சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட எலக்ட்ரிக் வாகன துணை பிராண்ட், அதன் முதல் தயாரிப்பு மாடலான இ5 ஸ்போர்ட்பேக்கை ஷாங்காயில் நடந்த ஒரு கண்காட்சி நிகழ்வில் வெளியிட்டது.
மேம்பட்ட டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் (ADP) இன் கீழ் SAIC மோட்டருடன் இணைந்து உருவாக்கப்பட்ட இ5 ஸ்போர்ட்பேக், சீனாவில் ஆடியின் மின்சார வாகன லட்சியங்களில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
இந்த மாடல் நவம்பர் 2024 இல் வெளியிடப்பட்ட ஆடி இ கான்செப்ட்டிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் ஆடி பிராண்டின் கீழ் இரண்டு கூடுதல் எலக்ட்ரிக் வாகனங்களை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன.
அம்சங்கள்
காரின் முக்கிய அம்சங்கள்
இ5 ஸ்போர்ட்பேக் கார் ஒரு தட்டையான, செவ்வக முன் ஃபாசியா, மெலிதான ஹெட்லேம்ப்கள் மற்றும் சென்சார்கள் மற்றும் ரேடார் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் தனித்துவமான கருப்பு வளையத்துடன் கூடிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், இது ஆடியின் சின்னமான நான்கு-வளைய லோகோவை புதிய 'AUDI' என்ற சொல் குறியீட்டின் கீழ் மாற்றியுள்ளது.
இது பிராண்டின் தனித்து இயங்கும் தன்மையைக் குறிக்கிறது. உள்ளே, இ5 ஸ்போர்ட்பேக் முழு டேஷ்போர்டையும் உள்ளடக்கிய 27-இன்ச் 4கே அல்ட்ரா-வைட் டிஸ்ப்ளேவுடன் பொருத்தப்பட்டுள்ளது.
AUDI OS இல் செயல்படும் இந்த இன்டர்பேஸ், முழுமையாக தொடு அடிப்படையிலான கட்டுப்பாடுகள் மற்றும் உள்ளுணர்வு தொடர்புக்காக தனிப்பயனாக்கக்கூடிய தளவமைப்புகளை கொண்டுள்ளது.
பாதுகாப்பு
பாதுகாப்பு அம்சங்கள்
AUDI 360 உதவி ஓட்டுநர் அமைப்பு மூலம் பாதுகாப்பு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, கூரையில் பொருத்தப்பட்ட LiDAR, 12 அல்ட்ராசோனிக் சென்சார்கள், மூன்று நீண்ட தூர ரேடார்கள் மற்றும் பல கேமராக்கள் ஆகியவை அரை தன்னாட்சி ஓட்டுநர் திறன்களை செயல்படுத்துகின்றன.
இந்த வாகனம் 800-வோல்ட் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது, இது வெறும் 10 நிமிடங்களில் 370 கிமீ வரை இயக்கத்தை வழங்குகிறது.
இது பின்புற மற்றும் ஆல்-வீல் டிரைவ் உள்ளிட்ட நான்கு வகைகளில் கிடைக்கும். 300 எச்பி முதல் உயர் செயல்திறன் 787 எச் பி வரையிலான ஆற்றலைக் கொண்டுள்ளது.
100 கிலோவாட் பேட்டரியைக் கொண்ட டாப் வேரியண்ட், ஒரு முறை சார்ஜ் செய்தால் 770 கிமீ வரை செல்லும்.