எலக்ட்ரிக் கார் பேட்டரிகளில் தீ பிடிக்கும் ஆபத்து; 3,000 கார்களை திரும்பப் பெறும் ஜாகுவார்
ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் வட அமெரிக்காவில் அதன் ஐ-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை, வாகனத்தின் பேட்டரிகளில் தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பது தெரிய வந்ததை அடுத்து திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோளாறு காரணமாக சுமார் 3,000 கார்களை ஜாகுவார் திரும்பப் பெறுகிறது. சாத்தியமான தீ அபாயத்திற்கு மத்தியில், பாதிக்கப்பட்ட ஐ-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவிகளின் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை வெளிப்புறத்திலும், கட்டிடங்களுக்கு அப்பாலும் நிறுத்துமாறு ஜாகுவார் அறிவுறுத்தியுள்ளது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது பேட்டரி தீ விபத்து ஏற்பட்டால் ஏற்படும் சேதத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பேட்டரிகள் போலந்தில் உள்ள எல்ஜி எனர்ஜி சொல்யூஷனால் தயாரிக்கப்படுகின்றன. இது தற்போது அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தால் ஆய்வுக்கு உட்பட்டது.
விபத்துகளை தடுக்க தற்காலிக தீர்வை அறிவித்துள்ள ஜாகுவார்
தீ விபத்து ஆபத்தில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு தற்காலிக தீர்வாக, ஜாகுவார் அதன் திறனில் 80% சார்ஜ் செய்வதை கட்டுப்படுத்தும் வகையில் பேட்டரி ஆற்றல் கட்டுப்பாட்டு கணினியை புதுப்பிக்குமாறு டீலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த குறிப்பிட்ட பிரச்சினைக்காக ஜாகுவார் எலக்ட்ரிக் கார்களை திரும்ப பெறும் அழைப்பை வெளியிடுவது இது முதல் முறை அல்ல. இதே பிரச்சனையுடன் தொடர்புடைய கார்களுக்கு முன்னர் மூன்றுமுறை திரும்பப் பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து எஸ்யூவிகளுக்கும் இந்த தீர்வு தேவைப்படுகிறது. கார்களில் முந்தைய மென்பொருள் புதுப்பிப்புகளைத் தொடர்ந்து அமெரிக்காவில் மூன்று தீ விபத்துகள் ஏற்பட்டதாக ஜாகுவார் வெளிப்படுத்தியுள்ளது. எனினும், இந்த சம்பவங்களில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.