அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு பயணம் செய்ய இருக்கும் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு பயணம் செய்வார் என்று பெய்ஜிங்கின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. "ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பின் பேரில், அதிபர் ஜி ஜின்பிங் மார்ச் 20 முதல் 22 வரை ரஷ்யாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்" என்று பெய்ஜிங்கின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் புதின் கலந்து கொண்டார். மேலும் இரு தலைவர்களும் செப்டம்பர் மாதம் உஸ்பெகிஸ்தானில் நடந்த பிராந்திய பாதுகாப்பு கூட்டத்தில் சந்தித்தனர். எனினும், நான்கு வருடத்திற்கு பிறகு, சீன அதிபர் முதல்முறையாக ரஷ்யாவுக்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கத்திய நாடுகளின் சந்தேகங்கள்
இரு நாட்டு அதிபர்களும் "மூலோபாய ஒத்துழைப்பு" பற்றி பேசுவார்கள் என்று கிரெம்ளின் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் "ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முழுமையான கூட்டணி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது பற்றி விவாதிப்பார்கள்" என்றும் "முக்கியமான இருதரப்பு ஆவணங்கள் கையெழுத்திடப்படும்" என்றும் கிரெம்ளின் தெரிவித்துள்ளது. ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்கி ஒரு வருடம் ஆகி இருக்கும் நிலையில், இந்த மாபெரும் அரசியல் நிகழ்வு நடக்க இருக்கிறது. ரஷ்ய-உக்ரைன் போரில் சீனா நடுநிலையில் இருக்கிறது என்று கூறி கொண்டாலும், அதை மேற்கத்திய நாடுகள் நம்ப தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளன. மேலும், ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு ராணுவ உதவி வழங்க திட்டமிட்டிருக்கலாம் என்று மேற்கத்திய நாடுகள் சந்தேகிக்கின்றன.