5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட் வழங்கும் ஹாங்காங்
உலகத்தின் ஒரு முக்கிய சுற்றுலா தலமான ஹாங்காங், 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க இருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்த, மீண்டும் உலக சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக இந்த அறிவிப்பை ஹாங்காங் வெளியிட்டுள்ளது. ஹாங்காங் அரசாங்கத்தின் பிரச்சாரமான, "ஹலோ, ஹாங்காங்", இந்த தெற்கு சீன நகரத்தைப் பற்றி "நல்ல கதைகளை" கூறுவதற்கான முயற்சியாக இருக்கும் என்று ஹாங்காங் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக நீடித்த அரசியல் அடக்குமுறை மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளால் ஹாங்காங்கின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதை சரி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஹாங்காங் தெரிவித்திருக்கிறது.
மார்ச் மாதத்தில் இருந்து டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்
சுற்றுலா துறைக்கான உரையின் போது "தனிமைப்படுத்தல் கிடையாது, கட்டுப்பாடுகளும் கிடையாது" என்று உறுதியளித்த தலைமை நிர்வாகி ஜான் லீ, சுற்றலா பயணிகளை ஈர்க்கும் விதமாக 5 லட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை அறிவித்தார். இந்த கிவ்-அவே மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும், உள்ளூர் விமான நிறுவனங்களான கேதே பசிபிக், HK எக்ஸ்பிரஸ் மற்றும் ஹாங்காங் ஏர்லைன்ஸ் மூலம் இந்த டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், 80,000 டிக்கெட்டுகள் கோடைகாலத்தில் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையினாலும் எல்லை அனைத்தும் மூடப்பட்டதாலும் 2022 வரை ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு பெரும்பாலும் இல்லை. ஆனால், இந்த ஊரடங்கால் பொருளாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. இதை மீட்டமைக்கவே இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.