பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு
2023ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 11 இடங்கள் சரிந்து, 160வது இடத்தைப் பிடித்துள்ளது. 180 நாடுகளில், இந்தியா 160வது இடத்தை பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 180 நாடுகளில் தற்போதைய பத்திரிகை சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பதை மதிப்பிட்ட எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு(RSF) இந்த கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பீட்டில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவின் தரவரிசை சரிந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே 3ஆம் தேதி, உலக பத்திரிகை சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் உலக பத்திரிகை சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்ட பத்திரிகை சுதந்திரக் குறியீடு, ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகைகளின் சுதந்திரம் எந்த அளவு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஊடகங்களுக்கு உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் இந்தியாவும் ஒன்று: அறிக்கை
சமீபத்தில், 'இந்தியா: தி மோடி கொஸ்டின்' என்ற தலைப்பில் வெளியான பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்ய முயற்சித்ததை அடுத்து, பத்திரிகை சுதந்திரம் குறித்த கேள்விகள் இந்தியாவில் எழுப்பப்பட்டன. ஜனவரி-1, 2023 முதல், இந்தியாவில் 1 பத்திரிகையாளர் கொல்லப்பட்டிருக்கிறார் என்றும் 10 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக மூன்று அல்லது நான்கு பத்திரிகையாளர்கள் தங்கள் பணியின் காரணமாக கொல்லப்படுவதால், ஊடகங்களுக்கு உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்" என்று உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டின் அறிக்கை கூறுகிறது. இந்திய அண்டை நாடுகளின் தரவரிசைகள்: பாகிஸ்தான்-150, நேபாளம் -95, இலங்கை-135, இராணுவ ஆட்சியின் கீழ் உள்ள மியான்மர்-173