ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர்
வடகொரியத் அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரவு நேர அணிவகுப்பில் தன் மகளுடன் கலந்து கொண்டார். அந்த அணிவகுப்பில் அதிக எண்ணிக்கையிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மத்திய பியோங்யாங்கில் உள்ள கிம் இல்-சுங் சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் 30,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றதாக ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் அதிபர் கிம் ஜாங் உன் உடன் வந்திருந்த அவரது ஒன்பது வயது மகளே தற்போது செய்திகளின் தலைப்பாகி இருக்கிறார். அவரது பெயர் கிம் ஜு ஏ என்று ஏபிசி நியூஸ் கூறியுள்ளது.
எதிர்கால வடகொரிய அதிபர் இவர் தானா?
கடந்த நவம்பர் மாதம் முதல் இராணுவம் தொடர்பான பல முக்கிய நிகழ்ச்சிகளில் கிம் ஜு ஏ கலந்துகொண்டுள்ளார். அதனால், அதிபரின் மகள் தான் அந்நாட்டின் எதிர்காலமாக இருக்கலாம் என்ற யூகத்தை பலரும் முன்வைத்துள்ளனர். அதாவது, அதிபர் கிம்முக்கு பிறகு அவரது மகளே நாட்டை ஆட்சி செய்வார் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டுமில்லாமல், கிம் ஜு ஏ தன் தந்தையுடன் இணைந்து காவலர்களை சோதனையும் செய்தார் என்று செய்திகள் கூறுகின்றன. பல ஆண்டுகளாக, வடகொரிய அரசு ஊடகங்கள் கிம்மின் குழந்தைகளைப் பற்றி குறிப்பிட்டதே இல்லை. தென்கொரிய உளவு நிறுவனம் அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக கூறி இருந்தது. அவர்கள் 13, 10 மற்றும் 6 வயதுடையவர்கள் என நம்பப்படுகிறது.