இஸ்ரேலின் இரும்புக் குவிமாடம் ஹமாஸ் ஏவுகணைத் தாக்குதலைப் பாதுகாக்க தவறியது, ஏன்?
கடந்த வாரம், அதாவது, 1973-இல் அரபு-இஸ்ரேல் போர் வெடித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த மறுநாள், காசா பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 5,000 ராக்கெட்டுகளை ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ஏவியது. ஆனால், இந்த தாக்குதலை இஸ்ரேல் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பல நாடுகள், இந்த தாக்குதல் பற்றி முன்னரே எச்சரிக்கை விடுத்ததாக கூறியது. ஆனாலும், இஸ்ரேல் இந்த எச்சரிக்கைகளுக்கு செவி மடுக்காததன் காரணம், அதன் பாதுகாப்பு அரண் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை தான் காரணம். குறிப்பாக, அயர்ன் டோம் (Iron Dome) என்று அழைக்கப்படும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பின் மீதான நம்பிக்கை தான்.
அயர்ன் டோம் என்றால் என்ன?
அயர்ன் டோம் எனப்படும், இரும்புக் குவிமாடம் கிட்டத்தட்ட ஊடுருவ முடியாததாக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ராக்கெட் தாக்குதல்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAVs) எதிர்கொள்ள நாட்டின் பல பகுதிகளில் இந்த மாடம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அயர்ன் டோம் 95% க்கும் அதிகமான துல்லியத்தைக் கொண்டுள்ளது எனக்கூறப்படுகிறது. ஆனால் சனிக்கிழமை ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலின் போது, அந்த பாதுகாப்பு அமைப்பு, ராக்கெட் தாக்குதலை கையாளத் தவறிவிட்டது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அவ்வப்போது இந்த அயர்ன் டோமின் ஏவுகணை மற்றும் ராக்கெட் இடைமறிப்பு திறன்களை மேம்படுத்தி வந்தாலும், கடுமையான ராக்கெட் தாக்குதல்களை சமாளிக்கும் திறன் இல்லை என்றே தெரிகிறது.
அயர்ன் டோமின் மூன்று பகுதிகள்
தரையிலிருந்து வான்வழி குறுகிய தூர அமைப்பு கொண்ட அயர்ன் டோம், மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது: கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ரேடார், போர் மேலாண்மை மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஏவுகணை துப்பாக்கிச் சூடு பிரிவு. இந்த பாதுகாப்பு அமைப்பை முறியடிக்க ஹமாஸ் சனிக்கிழமை ஒரு தொடர் தாக்குதலைத் தொடங்கியது. 20 நிமிடங்களுக்குள் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது, 5,000 ராக்கெட்டுகளை ஏவப்பட்டது. இதன் காரணமாக, இரும்புக் குவிமாடம் அதன் அதிகபட்ச திறனை எட்டியது. ஒரு கட்டத்தில், தொடர் ஏவுகணைகள் வீசப்படவே, அந்த இரும்பு குவிமாடம், தன்னுடைய முழு செயல் திறனை இழந்தது
'எப்படி பார்த்தாலும் நஷ்டம் இஸ்ரேலுக்கே' என திட்டமிட்ட ஹமாஸ்
இந்த இரும்பு குவிமாடத்தில் உள்ள இடைமறிப்பான்களின் ஒவ்வொன்றின் விலை $100,000 ஆகும். அதே சமயத்தில், ஒவ்வொரு ஏவுகணையும் $50,000 ஆகும். அதாவது ஹமாஸ் ராக்கெட்டுகள் அனைத்தையும் இஸ்ரேல் இடைமறித்திருந்தால், அதற்கு ₹ 2,079 கோடி செலவாகியிருக்கும். எப்படி இருந்தாலும் இஸ்ரேல் இழப்பை சந்திக்க வேண்டும் என்பதே ஹமாஸின் நோக்கம். ஹமாஸ் தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக, 2.3 மில்லியன் மக்கள் வாழும் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகளை கூண்டோடு ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் அதிபர் சூளுரைத்து உள்ளார். இந்த போரில், இஸ்ரேலியப் படைகள் மட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.