32,808 அடி ஆழத்திற்கு குழி தோண்டும் சீனா: காரணம் என்ன
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா, அதன் விஞ்ஞானிகளின் உதவியோடு 10,000 மீட்டர்(32,808 அடி) ஆழத்திற்கு குழி தோண்ட தொடங்கியுள்ளது. சீனாவின் மிக ஆழமான ஆழ்துளை கிணறுக்கான துளையிடும் பணி நேற்று அந்நாட்டின் எண்ணெய் வளம் மிக்க ஜின்ஜியாங் பகுதியில் தொடங்கியது. நேற்று காலை, சீனா தனது முதல் சிவிலியன் விண்வெளி வீரரை கோபி பாலைவனத்திலிருந்து விண்வெளிக்கு அனுப்பியது. இந்நிலையில், விண்வெளியில் சாதனைப்படைக்க முயற்சிப்பது மட்டுமல்லாமல், பூமிக்கு அடியிலும் சாதனை படைக்க சீனா முயற்சித்து வருகிறது. சீனா தற்போது தோண்ட ஆரம்பித்திருக்கும் ஆழ்துளை கிணறு 10க்கும் மேற்பட்ட பாறை அடுக்குகளை ஊடுருவி, பூமியின் மேலோட்டத்தில் உள்ள கிரெட்டேசியஸ் அமைப்பை அடையும். அங்கிருக்கும் பாறைகள் சுமார் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியதாக இருக்கும்.
உலகின் மிக ஆழமான துளை ரஷ்யாவில் உள்ளது
2021 ஆம் ஆண்டில் நாட்டின் சில முன்னணி விஞ்ஞானிகளிடம் உரையாற்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங், பூமிக்கு அடியில் ஆழமான ஆய்வு நடத்தி முன்னேற்றம் காண வேண்டும் என்று கூறினார். இத்தகைய பணி, கனிம மற்றும் ஆற்றல் வளங்களை அடையாளம் காணவும், பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற சுற்றுச்சூழல் பேரழிவுகளின் அபாயங்களை மதிப்பிடவும் உதவும். பூமியில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிக ஆழமான துளை ரஷ்யாவில் உள்ளது. இந்த மிக ஆழமான துளை, ரஷ்ய கோலா சூப்பர் டீப் போர்ஹோல் என்று அழைக்கப்படுகிறது. இந்த துளையிடல் 1989இல் முடிக்கப்பட்டது. இது 12,262 மீட்டர் (40,230 அடி) ஆழம் கொண்டதாகும். இந்த ஆழ்துளையை தோண்டி முடிக்க 20 வருடங்கள் ஆனது.