பனிப்போருக்கு பிந்தைய மிகப்பெரிய கைதி பரிமாற்றம்; ரஷ்ய உளவாளிகளின் சுவாரஸ்ய பின்னணி
ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக இருபத்தி நான்கு கைதிகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) விடுவிக்கப்பட்டனர். இது பனிப்போருக்கு பிந்தைய மிகப்பெரிய நிகழ்வாகும். இந்த 24 பேரில், 16 பேர் ரஷ்யாவிலிருந்து மேற்குலக நாடுகளுக்கு மாற்றப்பட்டனர். எட்டு பேர் ரஷ்யாவுக்குத் திரும்பினர். விடுவிக்கப்பட்ட ரஷ்யர்களில் குறிப்பிடத்தக்கவர்களான ஆர்ட்டெம்-அன்னா டல்ட்சேவ் தம்பதி 2022இல் உளவாளிகள் என கண்டறிந்து கைது செய்யப்படுவதற்கு முன்பு, ஸ்லோவேனியாவில் அர்ஜென்டினா ஜோடியாக நடித்துள்ளனர். ஆர்ட்டெம் லுட்விக் கிஷ் என்ற புனைப்பெயரில் ஒரு தொடக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தினார், அதே நேரத்தில் அன்னா மரியா ரோசா மேயர் முனோஸ் என்ற ஆன்லைன் கலைக்கூடத்தை நடத்தி வந்தார்.
வெளிநாட்டில் உளவு பார்க்க பல ஆண்டுகளாக பயிற்றுவிக்கப்படும் ரஷ்ய உளவாளிகள்
இந்த தம்பதியைப் போலவே, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ரஷ்யர்கள் பல ஆண்டுகளாக தங்கி திருமணம், வேலை தேடுதல் மற்றும் குடும்பங்களை கட்டமைத்தல் என தங்களை சாதாரண வாழ்க்கைக்கு பழக்கிக் கொள்கின்றனர். இதுபோன்ற ஒரு சம்பவத்தில் அமெரிக்காவில் கனடிய பெண்ணாக நீண்ட காலம் தங்கியிருந்த ஒரு ஜோடி 2010இல் எஃப்பிஐ அமைப்பிடம் பிடிபட்டதன் மூலம் இது வெளிச்சத்திற்கு வந்தது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இவர்களின் குழந்தைகளுக்கு கூட இவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியாது. இதற்கிடையே, தற்போது கைதி பரிமாற்றத்தில் ரஷ்யாவிற்கு திரும்பும் நபர்களின் சேவையை பாராட்டிய அதிபர் புடின், தங்கள் நாட்டுக்கு அவர்கள் செய்த தியாகம் என இதை வர்ணித்துள்ளார்.