நியூயார்க் நகரின் புதிய முதல் பெண்மணி: ஜோஹ்ரான் மாம்டானியின் மனைவி ரமா துவாஜி யார்?
செய்தி முன்னோட்டம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் அரசியல்வாதி ஜோஹ்ரான் மாம்டானி, நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். மாம்டானி பாரம்பரிய அரசியல் முறைகளை மாற்றி எழுதி ஆட்சியை பிடித்திருக்கும் நிலையில், அவரது மனைவி ரமா சவாஃப் துவாஜி நியூயார்க் நகரின் புதிய முதல் பெண்மணியாகிறார். மாம்டானியின் வெற்றியின் பின்னணி மற்றும் முதல் பெண்மணியின் ஆளுமை குறித்த விவரங்கள் இங்கே:
ரமா சவாஃப் துவாஜி
புதிய முதல் பெண்மணி ரமா சவாஃப் துவாஜி யார்?
மாம்டானியின் வெற்றிக்குப்பிறகு, அவரது மனைவி ரமா சவாஃப் துவாஜி நியூயார்க்கின் புதிய முதல் பெண்மணியாகிறார். ரமா துவாஜி ஒரு சிரிய-அமெரிக்கர். ஹூஸ்டனில், சிரிய பெற்றோருக்கு மகளாக பிறந்த இவர், அமெரிக்கா மற்றும் துபாய் இடையே தன் இளமைப் பருவத்தைக் கழித்தார். இவர் ஒரு பிரபலமான இல்லஸ்ட்ரேட்டர் மற்றும் செராமிக் கலைஞர் (Illustrator and Ceramicist). இவருடைய படைப்புகள் தி நியூ யார்க்கர், வோக் மற்றும் பிபிசி போன்ற உலகப் புகழ்பெற்ற வெளியீடுகளில் இடம்பெற்றுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த பெண்களின் அனுபவங்களை மையப்படுத்திய இவரது கலைப்படைப்புகள் மிகவும் பிரபலம் நியூயார்க் வரலாற்றில் ஒரு இந்திய-முஸ்லிம் மேயரும், ஒரு சிரிய-அமெரிக்க முதல் பெண்மணியும் தலைமைப் பொறுப்புக்கு வந்திருப்பது ஜனநாயகத்தின் ஒரு புதிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
அரசியல் எழுச்சி
ஜோஹ்ரான் மாம்டானியின் அரசியல் எழுச்சி
நியூயார்க் நகரத்தின் முதல் இந்திய-அமெரிக்க முஸ்லிம் மேயரான மாம்டானி, வெறும் 34 வயதில் அரசியல் உயர் பதவியைக் கைப்பற்றியுள்ளார். அவர், மலிவான வீட்டு வசதி, பொதுப் போக்குவரத்தை இலவசமாக்குதல், பணக்காரர்கள் மீது கூடுதல் வரி விதித்து உலகளாவிய குழந்தை பராமரிப்பை வழங்குதல் போன்ற முற்போக்கு திட்டங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். முன்னாள் மேயர் ஆண்ட்ரூ கியூமோ போன்ற மூத்த தலைவர்களையும், அரசியல் சாம்ராஜ்யத்தின் ஆதரவையும் அவர் எதிர்த்துப் போட்டியிட்டார். மேலும், தனது ஆற்றல்மிக்க கவர்ச்சி மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இளம் வாக்காளர்கள் மற்றும் மாறுபட்ட சமூகத்தினரிடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதரவைப் பெற்றார்.
மீரா நாயர்
மாம்டானியின் தாய் பிரபல இயக்குனர் மீரா நாயர்
மீரா நாயர் ஒரு இந்திய அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவர். தனது தயாரிப்பு நிறுவனமான மீராபாய் பிலிம்ஸ் மூலம் சுயாதீன நாடகங்களை இயக்கியதற்காக அவர் அறியப்படுகிறார். கேன்ஸ் திரைப்பட விழாவிலிருந்து இரண்டு விருதுகளையும், வெனிஸ் திரைப்பட விழாவிலிருந்து நான்கு விருதுகளையும், இரண்டு பாஃப்டா விருதுகள் மற்றும் இரண்டு சீசர் விருதுகளுக்கான பரிந்துரைகளையும் பெற்றுள்ளார். அவரது படங்கள் இரண்டு அகாடமி விருது பரிந்துரைகளையும் பெற்றுள்ளன. மீரா திரைப்பட இயக்குநராக சலாம் பாம்பே! என்ற திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கினார். இது அகாடமி விருது, பாஃப்டா விருது மற்றும் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருதுக்கான பரிந்துரைகளைப் பெற்றது. அவர் இந்திய அரசின் பத்ம பூஷன் விருதை 2012-இல் பெற்றார்.