செங்கல்பட்டு, விழுப்புரத்தில் இன்று கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பிறந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 18) முதல் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் 22 வரை மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை எச்சரிக்கை
உள்மாவட்டங்களுக்கான மாவட்டங்களுக்கான மழை எச்சரிக்கை
IMD அறிக்கையின்படி, இன்று செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நாளை, நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய தமிழக பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
வெப்பநிலை
சென்னை மற்றும் வெப்பநிலை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
அதேவேளையில், வட உள் தமிழகத்தில் ஆகஸ்ட் 20 வரை வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.