ரசிகர் மீது பந்தை அடித்த டேனில் மெத்வதேவ் தகுதிநீக்கம்: பறிபோன ரூ.2.2 கோடி பரிசுத்தொகை
செய்தி முன்னோட்டம்
சர்வதேச டென்னிஸ் அரங்கில் முன்னணி வீரரும் முன்னாள் உலக நம்பர் 1 நட்சத்திரமுமான ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், சீனாவில் நடைபெற்ற சீனா ஓபன் 2026 ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆத்திரத்தில் செய்த விபரீத செயலால் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். செர்பிய ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சுக்கு எதிராக நடைபெற்ற இந்த அனல் பறக்கும் அரையிறுதி ஆட்டத்தில், தன் மீதான கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் பார்வையாளர்கள் மாடத்தை நோக்கி மெத்வதேவ் பந்தை ஆக்ரோஷமாக அடித்ததில், ரசிகர் ஒருவரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் விதிமுறைகளின்படி மெத்வதேவ் உடனடியாக போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு, அவர் வென்றிருக்க வேண்டிய சுமார் ரூ.2.2 கோடி பரிசுத் தொகையையும் இழந்ததுடன், ஏடிபி ஃபைனல்ஸ் தகுதியையும் இழந்துள்ளார்.
ரசிகரைத் தாக்கியப் பந்து
மைதானத்தில் பரபரப்பு
போட்டியின் இரண்டாவது செட்டில் 5-7, 3-5 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த மெத்வதேவுக்கு எதிராக, இறுதிப்போட்டிக்கு முன்னேறும் நோக்கில் ஜோகோவிச் சர்வீஸ் செய்தார்.
அப்போது ஜோகோவிச்சின் சிறந்த வாலி ஷாட்டைத் திருப்பியடிக்கத் தவறிய மெத்வதேவ், விளம்பரப் பலகையில் பட்டுத் திரும்பி வந்த பந்தை மிகுந்த ஆத்திரத்துடன் பேக்ஹேண்ட் ஷாட் மூலம் நேராக பார்வையாளர்கள் அமர்ந்திருந்த கேலரியை நோக்கி ஓங்கி அடித்தார்.
எதிர்பாராதவிதமாக அந்த பந்து அங்கிருந்த ஒரு ரசிகரின் முகத்தில் மிக பலமாகத் தாக்கியது.
வலியால் துடித்த ரசிகர் உடனடியாக பாதுகாப்புப் படையினரால் முதலுதவி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
களத்தில் இருந்த நடுவர் மற்றும் போட்டி மேற்பார்வையாளர் உடனடியாக ஆலோசனை நடத்தி, ஏடிபி நடத்தை விதிகளின்படி மெத்வதேவை டிஃபால்ட் முறையில் தகுதிநீக்கம் செய்தனர்.
தகுதிநீக்கம்
பறிப்போன பரிசுத்தொகை
தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், மெத்வதேவுக்கு கிடைக்கவிருந்த 2,20,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.2 கோடி) பரிசுத் தொகை முற்றிலும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அவருக்கு வழங்கப்படவிருந்த 200 தரவரிசைப் புள்ளிகளும், தங்கும் விடுதி உள்ளிட்ட சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன.
கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் தொடரில் பெண் நடுவர் மீது பந்தை அடித்து நோவக் ஜோகோவிச் தகுதிநீக்கம் செய்யப்பட்டு சுமார் ரூ.2.4 கோடியை இழந்த சம்பவத்திற்குப் பிறகு, டென்னிஸ் வரலாற்றில் ஒரு வீரரின் தவறால் ஏற்பட்ட மிகப்பெரிய நிதியிழப்பாகும்.
இச்சம்பவத்திற்கு உருக்கமாக மன்னிப்புக் கேட்ட மெத்வதேவ், காயமடைந்த ரசிகர் நலமாக இருக்க வேண்டும் என்பதே தனது ஒரே பிரார்த்தனை எனக் கூறினார். ஜோகோவிச்சும் மெத்வதேவின் நிலைமைக்குத் தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.
டென்னிஸ் விதிமுறை
ஏடிபி ஃபைனல்ஸ் வாய்ப்பு
டென்னிஸ் விதிமுறைகளின்படி, போட்டிக்களத்தில் ஆத்திரத்திலோ அல்லது வேண்டுமென்றோ பந்தை ஆபத்தான முறையில் வெளியில் அடிப்பது கடுமையான குற்றமாகும். தற்போது 200 ரேங்கிங் புள்ளிகளை இழந்துள்ள மெத்வதேவ், ஆண்டு இறுதி ஏடிபி ஃபைனல்ஸ் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளார்.
அவருக்குப் பின்னால் 9-வது இடத்தில் உள்ள அலெக்ஸ் டி மினார், சீனா ஓபன் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளதால், மெத்வதேவை முந்திச் செல்ல அதிக வாய்ப்புள்ளது.
இதன் மூலம் ஆண்டின் முதல் 8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் மதிப்புமிக்க ஏடிபி ஃபைனல்ஸ் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் மெத்வதேவ் இழக்கும் உச்சக்கட்ட நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்.