பீட்சா வாங்கியதால் போலீஸில் சிக்கிய பிரபலம்! யாரிந்த ஆண்ட்ரூ டேட்?
ஆண்ட்ரூ டேட் என்பவர் சமூக வலைத்தளங்களில் வலம் வரும் பெரும் புள்ளி. 10 கோடி€ மதிப்புள்ள சொத்துகளை வைத்திருக்கும் இவர் பெண் வெறுப்பு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதற்கு பெயர் போனவர். இப்படிப்பட்ட இன்டர்நெட் ஜாம்பவானை கடந்த 29ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர். ஆண்ட்ரூ டேட்டால் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்பட்ட 6 பெண்களால் இவர் செய்த காரியங்கள் போலீஸாருக்கு தெரியவந்தது. அந்த பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர் ஆபாச படங்கள் எடுத்ததாகவும் அவர்களைப் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இவரும் இவரது சகோதரரும் ஆள் கடத்தல், பலாத்காரம், போன்ற குற்றங்களை செய்ய ஒரு தனி கூட்டத்தையே வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இது எல்லாம் தெரிந்தும் போலீஸாரால் ஆண்ட்ரூ எங்கிருக்கிறார் என்பதை 9 மாதங்களாக கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு பீட்சாவால் போலீஸில் சிக்கிய சம்பவம்:
இந்நிலையில், சமீபத்தில் இவருக்கும் சூழலியல் போராளி கிரெட்டா தென்பெர்க் என்பவருக்கும் ட்விட்டரில் வாய் தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சனையின் போது, கிரெட்டாவை கேலி செய்து ஆண்ட்ரூ ஒரு வீடியோவைப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் கிரெட்டாவின் பாலினத்தைப் பற்றி கேலி பேசியது மட்டுமல்லாமல் இரண்டு பீட்சா பெட்டிகளை வாங்கி அதை மறுசுழற்சி செய்ய முடியாது என்று சூழலியல் குறித்தும் கேலி செய்தார். ஆனால், 'மண்டையின் மீது இருந்த கொண்டையை மறந்தது' போல், அந்த பீட்சா பெட்டியில் இருந்த 'ஜெரி பீட்சா' என்பதை வீடியோ எடுக்கும் போது அவர் மறைக்க மறந்துவிட்டார். அதை வைத்து, ஆண்ட்ரூ இருக்கும் இடத்தை கண்டறிந்த ரோமானிய போலீஸார், அவரை 'லபக்' என்று பிடித்துவிட்டனர்.