காங்கோவில் அசுர வேகத்தில் பரவும் எபோலா வைரஸ்! உலக சுகாதார நிறுவனம் அவசர எச்சரிக்கை!
செய்தி முன்னோட்டம்
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மிகவும் அரிய வகை 'புந்திபுகியோ' (Bundibugyo) எபோலா வைரஸ் அதிரடி வேகத்தில் பரவி வருவதால், இதுவரை 134 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் அண்டை நாடான உகாண்டாவுக்கும் பரவியுள்ள சூழலில், உலக சுகாதார அமைப்பு (WHO) இதனைச் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொதுச் சுகாதார அவசரநிலையாக (PHEIC) அறிவித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கொடூர வைரஸ் தீவிரமாகப் பரவி, தற்போது 500-க்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பூசி இல்லை
அரிய வகை 'புந்திபுகியோ' (Bundibugyo) வைரஸ்
தற்போது காங்கோவில் பரவி வரும் 'புந்திபுகியோ' எபோலா வைரஸ் என்பது மிகவும் அரிதான மற்றும் ஆபத்தான ஒரு வகையாகும். தற்போது உலக அளவில் பயன்பாட்டில் உள்ள எபோலா தடுப்பூசிகளோ (உதாரணமாக: Ervebo) அல்லது மருந்துகளோ இந்த குறிப்பிட்ட புந்திபுகியோ வகைக்கு எதிராகச் செயல்பட அனுமதி பெறவில்லை. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட சில சோதனைக்கட்ட தடுப்பூசிகளை அமெரிக்கா மற்றும் பிரிட்டனிடமிருந்து பெற்றுப் பயன்படுத்த காங்கோ அரசு திட்டமிட்டு வருகிறது. ஆனால், இது முழுமையான பலன் தரக் கூடுதல் காலம் எடுக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தாமதமான கண்டறிதல்
தீவிரமடைந்த தொற்றுச் சங்கிலி
காங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள புனியா என்ற நகரில் கடந்த ஏப்ரல் 24 அன்றே இந்தத் தொற்றின் முதல் மரணம் நிகழ்ந்துள்ளது. ஆனால், ஆரம்பக்கட்ட சோதனைகளின் போது, வழக்கமாகப் பரவக்கூடிய 'ஜைர்' (Zaire) என்ற எபோலா வகைக்கான சோதனைகளே செய்யப்பட்டன. அச்சோதனைகளின் முடிவுகள் 'நெகட்டிவ்' என வந்ததால், சுகாதாரத் துறையினர் எச்சரிக்கையின்றி இருந்துவிட்டனர். பல வாரங்கள் கழித்து, தலைநகர் கின்ஷாசா ஆய்வகத்தில் நடத்தப்பட்ட தீவிர மரபணு சோதனையில்தான் இது அரிய வகை 'புந்திபுகியோ' எபோலா என்பது மே 14 அன்று உறுதி செய்யப்பட்டது. இந்த இடைப்பட்ட வாரங்களில் வைரஸ் கண்டறியப்படாமல் பரவியதே தற்போதைய விபரீத சூழலுக்கு முக்கியக் காரணமாகும்.
பரவலின் வேகம்
உலகளாவிய அவசர நிலை பிரகடனம்
வைரஸ் பரவலின் வேகம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு அது பரவியுள்ள விதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உலக சுகாதார அமைப்பு இந்த எபோலா பரவலை "சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசர நிலை"(PHEIC) ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது. காங்கோவின் எல்லையைத் தாண்டி அண்டை நாடான உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவிலும் இந்த வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், காங்கோவில் தங்கியிருந்த அமெரிக்க மருத்துவர் பீட்டர் ஸ்டாஃபோர்ட் உள்ளிட்ட சிலருக்கும் இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தீவிர சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சர்வதேச உதவி
பாதுகாப்பு சவால்கள்
பாதிக்கப்பட்ட இட்டூரி மற்றும் வடக்கு கிவு ஆகிய மாகாணங்களின் சில பகுதிகள் தற்போது ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்களின் (M23 குரூப்) கட்டுப்பாட்டில் உள்ளதால், சர்வதேச உதவி அமைப்புகள் அங்குச் சென்று பணியாற்றுவதில் பெரும் பாதுகாப்புச் சிக்கல் நீடிக்கிறது. மேலும், எல்லை இல்லாத மருத்துவர்கள் அமைப்பினர் கூறுகையில், புனியாவில் உள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அனைத்தும் சந்தேகிக்கப்படும் நோயாளிகளால் ஏற்கனவே முழுமையாக நிரம்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். யுனிசெஃப் (UNICEF) நிறுவனம் முதற்கட்டமாக 16 டன் கிருமிநாசினிகள் மற்றும் பாதுகாப்பு உடைகளை விநியோகித்து வருகிறது.