மார்பர்க் வைரஸ் என்றால் என்ன: மார்பர்க் பெரும் பரவலை அறிவித்த WHO
ஈக்குவடோரியல் கினியாவில் மார்பர்க் நோயின் முதல் பெரும் பரவலை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த வாரம் எக்குவடோரியல் கினியாவிலிருந்து செனகலில் உள்ள ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்ட பின்னர் சுகாதார நிறுவனம் இந்த தொற்றுநோயை உறுதிப்படுத்தி இருக்கிறது. காய்ச்சல், சோர்வு, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி உள்ளிட்ட அறிகுறிகளுடன் தற்போது ஒன்பது இறப்புகள் மற்றும் 16 சந்தேகத்திற்கிடமான வழக்குகள் இருப்பதாகவும், எக்குவடோரியல் கினியாவில் உள்ள அதிகாரிகளுக்கு பெரும் பரவலைத் தடுக்க மருத்துவ நிபுணர்களை அனுப்புவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. எபோலாவைப் போலவே, மார்பர்க் வைரஸும் வெளவால்களில் உருவாகிறது. இது பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் திரவங்கள் மூலம் மக்களிடையே பரவுகிறது.
மார்பர்க் என்னும் ரத்தக்கசிவு காய்ச்சல்
மார்பர்க் என்பது ஒரு ரத்தக்கசிவு காய்ச்சலாகும். இது உடலின் உறுப்புகளை பாதிக்கும். மேலும், இதனால் இரத்தப்போக்கும் ஏற்படலாம் என்று நோய் கட்டுப்பாட்டு மையங்கள் தெரிவித்துள்ளன. மார்பர்க் வைரஸ் பரவலுக்கான அறிகுறிகள்: நோய் பரவல் காலம் 2 நாட்கள் முதல் மூன்று வாரங்கள் வரை இருக்கும். கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலியுடன் அறிகுறிகள் திடீரென தொடங்கும். சில நோயாளிகள் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியை ஒரு வாரம் வரை அனுபவிக்கிறார்கள். கடுமையாக பாதிக்கப்ட்டவர்களுக்கு முதல் வாரத்தில் இரத்தப்போக்கு இருக்கும். சிலருக்கு வாந்தி அல்லது கழிவுகள் மூலம் ரத்தம் வரக்கூடும். இன்னும் சிலருக்கு ஈறுகள், மூக்கு மற்றும் பிறப்புறுப்புகளில் இருந்து இரத்தம் வரக்கூடும் என்று WHO தெரிவித்துள்ளது.