அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் செவ்வாயன்று ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு, இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். நான்காவது நாளாக தொடரும் இஸ்ரேல்-பாலீஸ்தானிய போரால் இதுவரை 1600க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ள்ளனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையின் மூலம், "இஸ்ரேல் அரசுக்கு உறுதியான மற்றும் ஒன்றுபட்ட ஆதரவை" அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையில் "ஹமாஸ் மற்றும் அதன் கண்டிக்கத்தக்க பயங்கரவாத செயல்களுக்கு கண்டனத்தையும்" அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
கூட்டறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
"இன்று, நாங்கள் - அதாவது பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனியின் அதிபர் ஷோல்ஸ், இத்தாலியின் பிரதமர் மெலோனி, இங்கிலாந்து பிரதமர் சுனக் மற்றும் அமெரிக்காவின் அதிபர் பைடன் ஆகியோர்- இஸ்ரேல் அரசுக்கு எங்கள் உறுதியான மற்றும் ஒன்றுபட்ட ஆதரவை தெரிவிக்கிறோம். ஹமாஸ் மற்றும் அதன் பயங்கரமான பயங்கரவாதச் செயல்களுக்கு எங்கள் தெளிவான கண்டனத்தையும் தெரிவித்து கொள்கிறோம்" என்று அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஹமாஸின் பயங்கரவாதச் செயல்களுக்கு எந்த நியாயமும் இல்லை, சட்டப்பூர்வ தன்மையும் இல்லை என்றும், உலகளவில் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்றும் தலைவர்கள் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த கூட்டறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பாலஸ்தீனியர்கள் குறித்து அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராகத் தன்னையும் தனது மக்களையும் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலின் முயற்சிகளுக்கு எங்களது நாடுகள் ஆதரவளிக்கும். இஸ்ரேலுக்கு விரோதமாக எந்தவொரு தரப்பினரும் இந்தத் தாக்குதல்களை பயன்படுத்திக் கொள்ள இது தருணம் அல்ல என்பதை நாங்கள் மேலும் வலியுறுத்துகிறோம். பாலஸ்தீனிய மக்களின் நியாயமான கோரிக்கைகளை நாங்கள் அனைவரும் அங்கீகரிக்கிறோம். இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் சமமான நீதி மற்றும் சுதந்திரம் கிடைப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், ஹமாஸ், பாலஸ்தீனிய மக்களின் நியாயமான கோரிக்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. இந்த போரால், பாலஸ்தீனிய மக்களுக்கு பயங்கரவாதம் மற்றும் இரத்தக்களரியை தவிர வேறு எதுவும் கிடைக்காது. என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிர்ந்திருக்கும் கூட்டறிக்கை:
'ஹமாஸின் பயங்கரவாதச் செயல்களுக்கு எந்த நியாயமும் இல்லை': கூட்டறிக்கை
"வரவிருக்கும் நாட்களில், இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்தவும், இறுதியில் அமைதியான மற்றும் ஒருங்கிணைந்த மத்திய கிழக்கை உருவாக்கவும், இஸ்ரேலின் நட்பு நாடுகளாகவும், பொதுவான நண்பர்களாகவும் நாங்கள் ஒற்றுமையாகவும் ஒருங்கிணைந்தும் செயல்படுவோம்" என்று அந்நாட்டு தலைவர்கள் கூட்டறிக்கையில் கூறியுள்ளனர். "ஹமாஸின் பயங்கரவாதச் செயல்களுக்கு எந்த நியாயமும் இல்லை, சட்டப்பூர்வ தன்மையும் இல்லை, மேலும் அவை உலகளவில் கண்டிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்," என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.