'மாலத்தீவை இந்தியா புறக்கணித்ததால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிப்பு': மன்னிப்பு கோரினார் மாலத்தீவின் முன்னாள் அதிபர்
இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், மாலத்தீவை புறக்கணிக்க இந்திய மக்கள் அழைப்பு விடுத்தது மற்றும் அது தனது நாட்டின் சுற்றுலாத் துறையை எவ்வாறு பாதித்தது என்பது குறித்து மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கவலை தெரிவித்துள்ளார். மேலும், மாலத்தீவு மக்கள் சார்பாக மன்னிப்புக் கோருவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது இந்தியாவுக்கு வந்திருக்கும் முன்னாள் அதிபர் முகமது நஷீத், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, மாலத்தீவி மக்கள் இதனால் வருந்துகின்றனர் என்றும் அவர் கூறினார். இந்திய சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு வர வேண்டும் என்று மாலத்தீவு மக்கள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
"பிரதமர் மோடிக்கு எனது நல்வாழ்த்துக்கள்": மாலத்தீவின் முன்னாள் அதிபர்
"இது மாலத்தீவை மிகவும் பாதித்துள்ளது. இதைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். மாலத்தீவு மக்கள் வருந்துகிறார்கள் என்று நான் சொல்ல விரும்புகிறேன், இது நடந்ததற்கு நாங்கள் வருந்துகிறோம். இந்திய மக்கள் மாலத்தீவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். விடுமுறையில் மாலத்தீவுக்கு வாருங்கள், எங்கள் விருந்தோம்பலில் எந்த மாற்றமும் ஏற்படாது" என்று முன்னாள் அதிபர் கூறியுள்ளார். முன்னாள் அதிபர் நஷீத் சமீபத்தில் பிரதமர் மோடியையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "நேற்றிரவு நான் பிரதமரை சந்தித்தேன். பிரதமர் மோடி அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நான் பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய ஆதரவாளர். பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நல்வாழ்த்துக்கள்." என்றும் நஷீத் கூறியுள்ளார்.