ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்; காண்க!
உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாராவில் சமீபத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆம், மொராக்கோவில் பெய்த அரிய மழையின் காரணமாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சஹாரா வெள்ளத்தில் மூழ்கியது. அரை நூற்றாண்டு காலமாக வறண்டு கிடக்கும் சஹாராவின் புகழ்பெற்ற ஏரியான இரிக்கி ஏரியின் குறிப்பிடத்தக்க அளவு, மழை நீரால் நிரப்பப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் படம்பிடித்தன. தென்கிழக்கு மொராக்கோ பொதுவாக கோடையின் பிற்பகுதியில் மழை பெய்யாது. இருப்பினும், கடந்த செப்டம்பரில், வருடத்திற்கு 250 மில்லிமீட்டருக்கும் குறைவான மழையைப் பெறும் பல பகுதிகளில், ஆண்டு சராசரியை விட இரண்டு நாட்கள் பெய்த மழை அதிகமே!
வெள்ளத்தால் கடுமையாக பாதிப்பு
இந்த மழை வெள்ளத்தால், பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ள டாடா (Tata) நகரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ரபாத்திற்கு தெற்கே சுமார் 450 கிலோமீட்டர்கள் (280 மைல்) தொலைவில் உள்ள டகோனைட்டில் 100 மில்லிமீட்டர்கள் (3.9 அங்குலம்) மழை 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளாக வறண்டு கிடந்த ஜாகோராவுக்கும் டாடாவுக்கும் இடையே உள்ள புகழ்பெற்ற ஏரியான இரிக்கி ஏரி இந்த வெள்ளத்தால் விரைவாக நிரம்பி வருவதை நாசா செயற்கைக்கோள் காட்டியது. 30 முதல் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வளவு குறுகிய காலத்தில் அதிக மழைப்பொழிவை எதிர்கொண்டுள்ளதாக மொராக்கோவின் வானிலை ஆய்வுக்கான பொது இயக்குநரகத்தின் ஹவுசின் யூபெப் கூறினார்.