திடீரென்று பச்சையாக மாறிய வெனிஸ் கால்வாய்: காரணம் என்ன
இத்தாலிய நகரமான வெனிஸில் இருக்கும் ஒரு கால்வாய் திடீரென்று பச்சை நிறமாக மாறி இருப்பது, உள்ளூர் வாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது எதனால் ஏற்பட்டிருக்கும் என்பது குறித்து பலரும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், இதற்கான சரியான காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை(மே-28) காலை 9:30 மணியளவில் கிராண்ட் கால்வாயின் நிறம் மாறி இருப்பதை வெனிசியர்கள் முதன் முதலாக கண்டனர். "இன்று காலை வெனிஸ் கிராண்ட் கால்வாயின் நீர் பாஸ்போரெசென்ட் பச்சையாக மாறியது. ரியால்டோ பாலத்திற்கு அருகில் உள்ள சில குடியிருப்பாளர்களால் இது தெரிவிக்கப்பட்டது. அந்த நீரின் தோற்றம் குறித்து விசாரிக்க காவல்துறையினருக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்" என்று வெனிட்டோ பிராந்திய தலைவர் லூகா ஜாயா ட்வீட் செய்துள்ளார்.
இதே போல் 1968ஆம் ஆண்டிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது
செய்தி வெளியானவுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நீரின் மாதிரியை சேகரித்தனர். அடுத்தபடியாக அவர்கள் அப்பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை சரிபார்த்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பிராந்திய ஏஜென்சியை சேர்ந்த மொரிசியோ வெஸ்கோ, "முதற்கட்ட பகுப்பாய்வின்படி, பச்சை சாயப்பொடி கால்வாயில் கலக்கப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார். இதே போல் 1968ஆம் ஆண்டிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று இணையவாசிகள் கூறி வருகின்றனர். அப்போது, அர்ஜென்டினா கலைஞர் நிக்கோலஸ் கார்சியா உரிபுரு, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வருடாந்திர வெனிஸ் பைனாலேயின் போது கிராண்ட் கால்வாயில் பச்சை நிற சாயத்தை கலந்தார் என்று கூறப்படுகிறது. சென்ற வாரம், இத்தாலியில் உள்ள காலநிலை ஆர்வலர்கள் ரோமின் புகழ்பெற்ற ட்ரெவி நீரூற்றில் கரியை நிரப்பி போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.