அமெரிக்காவில் 3 லட்சத்திற்கும் அதிகமான விசாக்கள் ரத்து: டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், குடிவரவு சட்டங்களை கடுமையாக்கும் முயற்சியின் பகுதியாக இதுவரை 3,00,000-க்கும் அதிகமான விசாக்களை ரத்து செய்துள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை அதிக அளவிலான விசாக்கள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். அமெரிக்க வெளியுறவுத் துறை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, விசா ரத்து நடவடிக்கைகளில் பெரும்பாலானவை குற்றச் செயல்கள் காரணமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. சட்டவிரோதக் குடிவரவு விதிமீறல்கள், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தல் மற்றும் நாட்டின் பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குதல் போன்றவை பிரதான காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
தணிக்கை
முன்னோடியில்லாத தீவிர தணிக்கை
அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இணைத்து நடத்தி வரும் இந்த தணிக்கையில், முந்தைய நிர்வாகங்களை காட்டிலும் அதிவேகத்தில் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 2025-இல் ரத்து செய்யப்பட்ட விசாக்களில் 25% வன்முறைத் தாக்குதல்கள் சார்ந்த குற்றங்களுக்கும், 22% மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்கும், மேலும் திருட்டு மற்றும் போதைப்பொருள் வழக்குகள் காரணமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விசா வைத்திருப்பவர்களின் சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் நடவடிக்கைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, அதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உடனடி விசா ரத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இத்தகைய தீவிர கட்டுப்பாடுகள் மற்றும் விசா சீரமைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.