ஈரானின் கெஷ்ம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்: ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள கெஷ்ம் தீவு மீது அமெரிக்க ராணுவம் குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுடன் முழுமையான போர் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் வாஷிங்டன் சமீபத்திய வாரங்களில் மேற்கொண்டு வரும் ரகசிய வரம்பிற்குட்பட்ட தாக்குதல்களின் ஒரு பகுதியாக இத்தாக்குதல் பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தியில் வெடிப்புச் சம்பவங்கள்
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ள கெஷ்ம் தீவில் பலத்த வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வ IRNA செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா தனது ராணுவப் பிரசாரத்தை மீண்டும் பெரிய அளவில் விரிவுபடுத்துவதாக காட்டிக்கொள்ளாமல் இருக்க, இத்தாக்குதல்களை மிகவும் சிறிய அளவிலும் ரகசியமாகவும் நடத்தி வருவதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இத்தாக்குதலுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், ஈரான் உடனான போர் தவிர்க்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு சுமார் 10 டாலர் வரை பெருமளவில் சரிந்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.
டிரம்ப் பேச்சு
"ஈரான் உடன்பாட்டிற்கு வர விரும்புகிறது"
ஈரான் அமைதி உடன்பாட்டிற்கு வர விரும்புவதாக தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப்,"ஈரான் மிக விரைவில் ஒரு சமரச தீர்வை எட்ட விரும்புகிறது. அது விரைவில் நடக்கலாம்!" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பிறகு ஈரான் மீது புதிய இராணுவ நடவடிக்கைகளை கருத்தில் கொண்டுள்ளீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இல்லை" எனப் பதிலளித்து தற்போதைக்கு போர்ப்பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பேசியுள்ளார்.