இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுகிறதா?
சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள பிரபல இந்திய அமெரிக்கர்கள் குழு நடத்திய சிறப்பு கூட்டத்தில், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுவதாகக் கூறியது. சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள புகழ்பெற்ற இந்திய-அமெரிக்கர்கள் குழு, நீதித்துறை, எஃப்.பி.ஐ மற்றும் காவல்துறையின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தியது. அதில், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தனர். கலிபோர்னியாவில் இந்துக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்பு குற்றங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் உள்ள சட்ட அமலாக்க அமைப்புகளால், இந்தியாவில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என, இந்திய-அமெரிக்கர்கள், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில், இந்தியர்களை குறி வைத்த நடக்கும் வன்முறை
பொதுவாக இந்திய-அமெரிக்கர்களுக்கும், குறிப்பாக இந்துக்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் திடீரென அதிகரித்து வருவது, சமூகத்தில் மிகுந்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது என்று இந்திய அமெரிக்கர்கள் தெரிவித்தனர். சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரக கட்டடத்தை எரிக்க முயன்றவர்கள் உட்பட, இந்திய தூதரக அதிகாரிகளை வெளிப்படையாக மிரட்டி, பயங்கரவாத சம்பவங்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுப்பவர்கள் உட்பட பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, சட்ட அமலாக்க அமைப்புகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்று பல சமூக உறுப்பினர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். அதிகரித்து வரும் இந்த அச்சத்தை நிவர்த்தி செய்வதில் அல்லது இந்தியாவிற்கு எதிரான அமெரிக்காவின் பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்துவதில் காவல்துறை தங்களுக்கு அதிக உதவி செய்யவில்லை என்றும் சமூகத் தலைவர்கள் கவலை தெரிவித்தனர்.