சீன 'வேவு' பலூனை சுட்டு தள்ளியது அமெரிக்கா: சீனா என்ன சொல்கிறது
தென் கரோலினா கடற்கரையில் சீன "வேவு" பலூனை அமெரிக்கா சனிக்கிழமை(பிப் 4) சுட்டு வீழ்த்தியதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. வேவு பார்த்ததாக கூறப்படும் பலூன், வட அமெரிக்கா முழுவதிலும் உள்ள முக்கிய இராணுவ இடங்களை கடந்து சென்ற போது, அதிபர் ஜோ பைடனின் உத்தரவின் பேரில் அமெரிக்க விமானப்படை அந்த பலூனை சுட்டு வீழ்த்தியது. அந்த பலூனை "வானிலை பலூன்" என்று அழைத்த சீனா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஒரு அதிகப்படியான "ரியாக்ஷன்" என்று தெரிவித்துள்ளது. மேலும், இது சீன-அமெரிக்க உறவுகளில் புதிய பதட்டங்களைத் தூண்டும் வண்ணம் இருக்கிறது என்றும் சீனா கூறியுள்ளது. சந்தேகத்திற்கிடமான சீன பலூனைக் கண்காணித்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த சில நாட்களில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
நினைத்தால் தேவையான பதிலடியை கொடுக்கலாம்: சீனா எச்சரிக்கை
உலக ஆதிக்கத்திற்கான போராட்டத்தில் ஒருவரையொருவர் விஞ்ச முயற்சிக்கும் நேரத்தில் இந்த சம்பவம் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே புதிய பதட்டங்களைத் தூண்டியுள்ளது. மேலும், சீனாவின் பிராந்திய உரிமைகோரல்களை நிராகரித்து வரும் தைவான் தொடர்பான பதட்டங்களும் இரு நாடுகளுக்கு இடையே உருவாகி இருக்கின்றன. பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த அறிவிப்பை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் வெளியிட்டார். தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சீனா செயல்பட்டிருப்பதாக அப்போது அவர் தெரிவித்திருந்தார். கரோலினா கடற்கரையில் சுடப்பட்ட அந்த பலூன், கடலில் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு சீன வெளியுறவுதுறை அமைச்சகம், "கடும் அதிருப்தி மற்றும் எதிர்ப்புகளை" வெளிப்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு "தேவையான பதிலடியை" கொடுக்கலாம் என்றும் சீனா எச்சரித்துள்ளது.