'சீனாவின் வேவு பலூனால்' அமெரிக்காவில் சர்ச்சை
அமெரிக்க வானில் கடந்த சில நாட்களாக உலாவி கொண்டிருக்கும் சீனாவின் கண்காணிப்பு பலூனால் அமெரிக்கா-சீனாவுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த பலூனை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பென்டகன்(அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகம்) அண்மையில் தெரிவித்திருந்தது. இதே போல இன்னொரு சீன கண்காணிப்பு பலூன், லத்தீன் அமெரிக்காவில் அதன்பின் கண்டுபிடிக்கப்பட்டதாக பென்டகன் கூறி இருந்தது. அமெரிக்க "வானில் நுழைந்த" கண்காணிப்பு பலூனைப் பற்றி குறிப்பிட்ட சீனா, அதற்கு வருத்தம் தெரிவித்திருந்தது. எதிர்பாராத விதமாக அது அமெரிக்காவிற்குள் நுழைந்து விட்டதாகவும் இது போன்ற பலூன்களை சரியாக கட்டுப்படுத்த இயலாது என்றும் கூறி இருந்தது. அமெரிக்காவில் இருக்கும் பலூன் இந்த வார இறுதியில் கரோலினாஸ் அருகே அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க கண்காணிப்பு பலூன்களின் நிபுணரான வில்லியம் கிம் கூறியதாவது:
முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீன பலூன் ஒரு சாதாரண வானிலை பலூன் போல இருந்தாலும், அது தனித்துவமான குணாதிசயங்களுடன் இருக்கிறது. அந்த பலூன், "பேலோட்", வழிகாட்டுதல் மற்றும் தகவல்களை சேகரிப்பதற்கான மின்னணுவியல் மற்றும் பெரிய சோலார் பேனல்களை கொண்டுள்ளது. அமெரிக்க இராணுவத்தால் இன்னும் அறிமுகப்படுத்தப்படாத மேம்பட்ட திசைமாற்றி தொழில்நுட்பங்களை அது கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இந்த ஹீலியம் பலூனை சுடுவது அவ்வளவு எளிதல்ல. அதை சுட்டாலும் அதிலுள்ள ஹீலியம் எல்லாம் வெளியேற 5-6 நாட்கள் எடுக்கும். இவை சுட்டால் உடனே வெடிக்க கூடிய அல்லது கீழே விழக்கூடிய பலூன்கள் அல்ல. தரையிலிருந்து வான் ஏவுகணைகளைப் பயன்படுத்துவது வேலை செய்யுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.