மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்?
கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தது. 10 மாதங்கள் கடந்துவிட்ட பின்னும் இந்த போர் ஓய்ந்ததாகத் தெரியவில்லை. ரஷ்யா உக்ரைனின் பல பகுதிகளைக் கைப்பற்றி இருக்கும் நிலையில் அதிபர் புதினின் குருவான அலெக்சாண்டர் டுகின் இந்த மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். உக்ரைனின் தலைநகரான கீவ், கார்கிவ் போன்ற பல இடங்களைக் கைப்பற்றி இருக்கும் ரஷ்யா கடந்த சில நாட்களாக தன் தாக்குதலைத் தீவிர படுத்தி இருக்கிறது. போர் ஆரம்பித்ததில் இருந்து நடக்காத அளவு ஏவுகணைத் தாக்குதல் நேற்று நடந்திருக்கிறது. ரஷ்ய படையின் இந்த தாக்குதலால் உக்ரைனில் போர் பதட்டம் முன்பை விட அதிகமாகி இருக்கிறது.
ரஷ்யா-உக்ரைன் போர்: பிரதமர் மோடி கருத்து!
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் நேற்று(டிச.16) தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த தொலைபேசி அழைப்பின் வாயிலாக, வர்த்தகம், ராணுவம், எரிசக்தி போன்ற துறைகளில் இந்தியா-ரஷ்யா இடையே நிலவும் நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேசினர். இந்த பேச்சு வார்த்தையின் போது, ரஷ்யா-உக்ரைன் மோதல் பற்றியும் பிரதமர் மோடி பேசினார். இது பற்றி பேசிய அவர், ரஷ்யா-உக்ரைன் போருக்கு பேச்சு வார்த்தையின் மூலமாக மட்டுமே தீர்வு காண வேண்டும் என்று ரஷ்ய அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார். அப்போது பிரதமர் கூறிய கருத்துக்களுக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் வேதந்த் படேல், "பிரதமர் மோடியின் கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம்." என்றார்.