Loading...
60 நாடுகளுக்கு அமெரிக்கா புதிய சுங்கவரி? ஜெனரிக் மருந்துகளுக்கு 200% வரை வரி உயர்வு
60 நாடுகளுக்கு எதிராக புதிய வரிகளை விரைவில் விதிக்கத் திட்டமிட்டுள்ளார் ட்ரம்ப்

60 நாடுகளுக்கு அமெரிக்கா புதிய சுங்கவரி? ஜெனரிக் மருந்துகளுக்கு 200% வரை வரி உயர்வு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 22, 2026
09:44 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்காலிக உலகளாவிய 10% சுங்கவரி நடவடிக்கை நிறைவடையவுள்ள நிலவரத்தை கருத்தில் கொண்டு, சுமார் 60 நாடுகளுக்கு எதிராக 10% முதல் 12.5% வரை புதிய வரிகளை விரைவில் விதிக்கத் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீயர் தெரிவித்துள்ள தகவலின்படி, 'கட்டாய உழைப்பு' தொடர்பான 'பிரிவு 301' விசாரணையின் அடிப்படையில் இந்த வரிகள் விதிக்கப்படவுள்ளன. அதன்படி, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் 99%-க்கும் அதிகமான பங்கைக் கொண்ட சுமார் 60 நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு 10% முதல் 12.5% வரை கூடுதல் வரி விதிக்கப்படும்.

முக்கிய அம்சங்கள்

புதிய சுங்கவரித் திட்டம்: முக்கிய அம்சங்கள்

கடந்த பிப்ரவரியில் தற்காலிகமாக விதிக்கப்பட்ட வரிகள் முடிவுக்கு வரும் நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப 'பிரிவு 301'-ஐப் பயன்படுத்தி சட்டரீதியான புதிய சுங்கவரி சட்டகத்தை அமெரிக்கா அமைத்துள்ளது.

உற்பத்தித் திறன் மற்றும் கட்டாய உழைப்பு தொடர்பான அமெரிக்காவின் இந்த விசாரணையில் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, ஜப்பான், மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகள் அடங்கும்.

இந்திய வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளபடி, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தச் சட்டகம் தயார் நிலையில் உள்ளது; சரியான தருணத்தில் அது கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெனரிக் மருந்து

ஜெனரிக் மருந்துகளுக்கு பாயும் 200% அபராத வரி

அமெரிக்காவில் மருந்து உற்பத்தியை அதிகரிக்கவும், பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் (Generic Drugs) மருந்துகளின் அளவைக் குறைக்கவும் அதிபர் ட்ரம்ப் புதிய காலக்கெடுவுடன் கூடிய வரித் திட்டத்தை அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 1, 2026 - ஆகஸ்ட் 2028 (2 ஆண்டுகள்): 0% (வரி விலக்கு)

ஆகஸ்ட் 2028 - ஆகஸ்ட் 2029 (1 ஆண்டு): 100%

ஆகஸ்ட் 2029 முதல்: 200% இறக்குமதி வரி விதிக்கப்படும்.

"அமெரிக்காவில் சொந்தமாக உற்பத்தி ஆலைகளை அமைக்காத மருந்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் நோக்கிலேயே இந்த வரி உயர்வு கொண்டுவரப்படுகிறது. இது அமெரிக்கப் பொருளாதாரத்தையும் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பையும் மேம்படுத்தும்." என டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அரசியல் அழுத்தங்கள்

உள்நாட்டில் எழும் அரசியல் அழுத்தங்கள்

அமெரிக்காவில் பெட்ரோல் விலை கேலனுக்கு $4-ஐத் தாண்டியுள்ளதாலும், நுகர்வோர் பொருட்களின் விலை உயர்ந்து வருவதாலும், ட்ரம்ப்பின் இந்தத் தொடர் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க வாக்காளர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இடைத்தேர்தலை மனதில் கொண்டு, மாட்டிறைச்சி, காபி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்க அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது.

ADVERTISEMENT