சென்னை பட்டினப்பாக்கத்தில் ₹1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
செய்தி முன்னோட்டம்
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்த ₹1,200 கோடி மதிப்பிலான புதிய சட்டமன்ற மற்றும் தலைமைச் செயலக வளாக திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. செய்திகளின் படி, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள மயிலாப்பூர் ஊரக எல்லைக்குட்பட்ட 25.55 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்(22.89 ஏக்கர்), சென்னை மாநகராட்சி(0.93 ஏக்கர்) மற்றும் வருவாய்த் துறை (1.73 ஏக்கர்) நிலங்கள் அடங்கும். இதற்காக கட்டிட வடிவமைப்பு, ஆலோசனைக் குழு தேர்வு மற்றும் இறுதிக்கட்ட வரைபடங்களை முடிவு செய்ய 3 சிறப்பு உயர்மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுப்பணித்துறை 3 மாதங்களுக்குள் விரிவான திட்ட அறிக்கையை (DPR) மதிப்பீடுகளுடன் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
எழும் எதிர்ப்பு
எழும் எதிர்ப்புகளும் கவலைகளும்
பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள நொச்சிக்குப்பம், முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம் உள்ளிட்ட 9 மீனவக் கிராமங்களின் பாரம்பரிய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனத் தமிழ்நாடு மீனவ மக்கள் முன்னேற்றச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
மேலும் சாந்தோம் நெடுஞ்சாலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 25 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்காலத்திற்குப் போதாது என்றும், சென்னைக்கு வெளியே 500 முதல் 1,000 ஏக்கரில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மீனவ அமைப்புகள் செப்டம்பர் 15 அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி அடுத்தகட்டப் போராட்டங்களை முடிவு செய்யவுள்ளன.