
'பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்': வெளிநாட்டுப் படங்களுக்கு 100% வரி விதித்த அமெரிக்கா
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க திரைப்படத் துறையை மீட்டெடுக்கும் நோக்கில் ஒரு பெரிய நடவடிக்கையாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரி விதிப்பதாக அறிவித்தார்.
வரி விதிக்கும் செயல்முறையைத் தொடங்க வர்த்தகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) ஆகியவற்றிற்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக அறிவித்தார்.
தனது Truth Social தளத்தில் பதிவிட்ட டிரம்ப், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க ஸ்டுடியோக்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களை கவர்ந்திழுக்க லாபகரமான சலுகைகளை வழங்குவதற்காக மற்ற நாடுகளை விமர்சித்தார்.
மேலும் நிலைமையை பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று விவரித்தார்.
தயாரிப்பு
"மீண்டும் அமெரிக்காவில் தயாரிப்புகள் தொடங்க வேண்டும்"
"அமெரிக்க திரைப்படத் துறை மிக வேகமாக இறந்து கொண்டிருக்கிறது," என்று டிரம்ப் ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில் கூறினார். உள்நாட்டு திரைப்படத் தயாரிப்புக்குத் திரும்ப வேண்டியதன் அவசியத்தை டிரம்ப் வலியுறுத்தினார்.
மேலும், "அமெரிக்காவில் மீண்டும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்!" என்றார்.
தற்போது விதிக்கப்படும் புதிய கட்டணங்கள், போட்டியை சமன் செய்வதையும், அமெரிக்க மண்ணில் ஸ்டுடியோக்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடர ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
பதில் நடவடிக்கை
ஹாலிவுட் படங்களுக்கு சீனா தடை விதித்ததை தொடர்ந்து வரும் டிரம்பின் நடவடிக்கை
சீனப் பொருட்களுக்கு டிரம்ப் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வரிகளை விதித்ததற்கு பதிலளிக்கும் விதமாக, சீனா தனது சந்தையில் அனுமதிக்கப்பட்ட ஹாலிவுட் படங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாக அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பு வெளியான ஒரு மாதத்திற்குள், தற்போது டிரம்பின் வெளிநாட்டுத் தயாரிப்பு படங்களுக்கு 100 சதவீத வரி அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனா இரண்டாவது பெரிய திரைப்படச் சந்தையாகும்.
ஹாலிவுட்
ஹாலிவுட்டின் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை
டிரம்பின் இந்த புதிய வரி கொள்கை ஹாலிவுட்டை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு பதிலாக, எதிர் விளைவை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொற்றுநோயிலிருந்து இன்னும் மீண்டு வரும் டிஸ்னி, பாரமவுண்ட் மற்றும் வார்னர் பிரதர்ஸ் போன்ற முக்கிய ஸ்டுடியோக்களை இந்த வரி நடவடிக்கை மேலும் பாதிக்கின்றன என்று CNN ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏனெனில் பல அமெரிக்க திரைப்படங்கள் வரிச் சலுகைகள் மற்றும் குறைந்த தொழிலாளர் செலவுகளிலிருந்து பயனடைய வெளிநாடுகளில் படமாக்கப்படுகின்றன.
புதிய வரி கொள்கை இயற்றப்பட்டால், பொருட்களை விட சேவைகளை குறிவைக்கும் முதல் அமெரிக்க வரிகளாக இவை இருக்கும்.