இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்க டிரம்பிற்கு அதிகாரம்! ரஷ்யா - ஈரான் தடைகள் சட்டத்திற்கு ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரை கடுமையான வரிகளை விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் வரலாற்று சிறப்புமிக்க லின்ட்சி ஓ. கிரகாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026 சட்ட மசோதாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) கையெழுத்திட்டுள்ளார். இந்தச் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையைத் தொடர்ந்து தற்போது அதிகாரப்பூர்வ சட்டமாக மாறியுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
விதிவிலக்கு நிபந்தனை
30 நாட்களில் அமலுக்கு வரும் சட்டம் மற்றும் விதிவிலக்கு நிபந்தனைகள்
அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ள இந்த சட்டம் அடுத்த 30 நாட்களுக்குள் முழுமையாக அமலுக்கு வரவுள்ளது.
சட்டம் அமலாவதற்கு முந்தைய 12 மாதங்களில் ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கிய முதல் 5 நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு 100% வரை கூடுதல் வரிகளை விதிக்க இது அதிபருக்கு முழு அதிகாரம் வழங்குகிறது.
இருப்பினும், ரஷ்யாவின் மொத்த ஏற்றுமதியில் 15 சதவீதத்திற்கும் குறைவாக எரிவாயு இறக்குமதி செய்து, அதை மேலும் குறைக்க குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்த நாடுகளுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படும்.
ரஷ்யா
ரஷ்யாவின் நிழற்படை கப்பல்கள் மற்றும் கூட்டாளிகள் மீது கட்டுப்பாடு
ரஷ்யாவின் ஆற்றல் துறை உற்பத்தி மற்றும் பொருளாதாரத் தடைகளை மீறி இயங்கும் நிழல் கப்பல்படை (Shadow Fleet) கப்பல் உரிமையாளர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
மேலும் ஈரானுக்கு எதிராக ஏற்கெனவே அமலில் உள்ள பொருளாதாரத் தடைகளை மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்த சட்டம் நீட்டிக்கிறது.
இந்த சட்டத்தின் கீழ் வரிகளை விதிப்பது அல்லது விலக்கு அளிப்பது குறித்த முழுமையான அதிகாரம் அதிபர் டிரம்பின் முடிவிற்கே விடப்பட்டுள்ளது.
சீன அதிபர்
சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்க வருகை மற்றும் சர்வதேசத் தாக்கம்
அமெரிக்கா - சீனா இடையே உயர்மட்ட தூதரக பேச்சுவார்த்தைக்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் வாஷிங்டன் வரவுள்ள சில தினங்களுக்கு முன்பாக டிரம்ப் இந்த சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
சீன அதிபரை நேரடியாக ஆண்ட்ரூஸ் விமானப் படைத் தளத்திற்கே சென்று வரவேற்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் சர்வதேச ஆற்றல் சந்தையிலும், இந்தியா மற்றும் சீனாவுடனான அமெரிக்க வர்த்தக உறவிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.