LOADING...
"வருமான வரிக்கு இனி வேலையில்லை!": அமெரிக்காவில் புரட்சியை அறிவித்த ட்ரம்ப்
அமெரிக்காவில் புரட்சியை அறிவித்த ட்ரம்ப்

"வருமான வரிக்கு இனி வேலையில்லை!": அமெரிக்காவில் புரட்சியை அறிவித்த ட்ரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2026
09:08 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை ஆற்றிய "பீப்பிள்ஸ் ஸ்டேட் ஆஃப் தி யூனியன்" உரையில், நாட்டின் பொருளாதார கட்டமைப்பையே மாற்றியமைக்கும் ஒரு அதிரடித் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். தற்போதைய வருமான வரி முறையை ஒழித்துவிட்டு, அதற்கு பதிலாக வெளிநாடுகள் செலுத்தும் இறக்குமதி வரிகளை கொண்டு அரசு நிர்வாகத்தை நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

சவால்

உச்ச நீதிமன்ற தீர்ப்பும் ட்ரம்ப்பின் சவாலும்

சமீபத்தில் ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை "மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று குறிப்பிட்ட ட்ரம்ப், இந்த தீர்ப்பு தனது கரங்களை வலுப்படுத்தியுள்ளதாக கூறினார். புதிய சட்டப்பிரிவுகளின் கீழ் தான் விதிக்கப்போகும் வரிகள், முந்தைய வரிகளை விட "மிகவும் மோசமானதாக" இருக்கும் என்பதை உலக நாடுகள் உணர்ந்துள்ளதால், அவை ஏற்கனவே செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தங்களை தொடர விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

வருமான வரி

வருமான வரி ரத்து - புதிய இலக்கு

"வெளிநாடுகள் செலுத்தும் இறக்குமதி வரிகள், எதிர்காலத்தில் அமெரிக்க மக்களின் வருமான வரிச் சுமையை முழுமையாக நீக்கும். இது ஒரு காலத்தில் வெற்றிகரமாக இருந்த முறை, மீண்டும் அதை அமல்படுத்துவேன்," என்று ட்ரம்ப் முழங்கினார். மற்ற நாடுகள் அமெரிக்காவை நீண்டகாலமாக ஏமாற்றி வந்ததாகவும், தற்போது அந்த நாடுகள் சரியான வர்த்தக உடன்படிக்கைக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தன்னுடைய இறக்குமதி வரி மிரட்டல்தான் பல சர்வதேச போர்களை தடுத்து நிறுத்தி அமைதியை கொண்டு வந்துள்ளதாக ட்ரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்தார். புதிய வரி விதிப்புகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களே போதுமானது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement