Loading...
ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: இரண்டு வேறுபட்ட உளவுத்துறை அறிக்கைகள் கைவசம் உள்ளதாக டொனால்ட் டிரம்ப் தகவல்
பாரசீக வளைகுடாப் பகுதிக்கு 3-வது விமானம் தாங்கிக் கப்பல் படை மற்றும் 10,000 வீரர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது

ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: இரண்டு வேறுபட்ட உளவுத்துறை அறிக்கைகள் கைவசம் உள்ளதாக டொனால்ட் டிரம்ப் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 26, 2026
11:14 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் மற்றும் அதிகாரிகள் மீது ஈரான் தீவிர தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஈரான் தொடர்பாக தங்களிடம் இரு வேறுபட்ட உளவுத்துறை அறிக்கைகள் கைவசம் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க பணியாளர்களை குறிவைத்து ஈரான் நடத்தும் சதித்திட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தேசிய உளவுத்துறை இயக்குநர் ஜெய் கிளேட்டன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுக்கு அனுப்பப்பட்ட ரகசிய அறிக்கையைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "ஈரான் குறித்து மிகவும் மேம்பட்ட உளவுத் தகவல்கள் எங்களிடம் உள்ளன. அதில் சில பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன, சில ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன" எனக் குறிப்பிட்டார்.

போர்

ராணுவப் பலத்தை அதிகரிக்கும் அமெரிக்கா, தயாராகும் ஈரான்

நவம்பர் 3 இடைக்கால தேர்தலுக்கு பிறகு ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் ராணுவத் தாக்குதல்களை தொடங்கலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், பாரசீக வளைகுடாப் பகுதிக்கு 3-வது விமானம் தாங்கிக் கப்பல் படை மற்றும் 10,000 வீரர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

மேலும், பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் அண்மையில் இஸ்ரேல் சென்று பிரதமர் நெதன்யாஹுவைச் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த நகர்வுகளுக்குப் பதிலளித்துள்ள ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான புதிய போர் ஈரானின் கொள்கைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

"மீண்டும் போர் தொடுக்க நினைத்தால், கடந்த காலத்தில் கிடைத்த அதே தோல்வியே அவர்களுக்கு மீண்டும் கிடைக்கும்" என அவர் எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT