நான்காவது பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்க இராணுவம்
இந்த மாதம் நான்காவது முறையாக, அடையாளம் தெரியாத மற்றொரு பறக்கும் பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது. நேற்று(பிப் 12) பிற்பகல் கனடாவின் எல்லைக்கு அருகில் உள்ள ஹுரோன் ஏரியில் அதை சுட்டு வீழ்த்துமாறு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். அந்த பொருள் 20,000 அடி(6,100 மீ) உயரத்தில் பறந்து கொண்டிருந்ததால் அது சிவில் விமானப் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தது என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இது மொன்டானாவில் உள்ள இராணுவ தளங்களுக்கு மேலே சனிக்கிழமையன்று கண்டறியப்பட்டது. இராணுவ அச்சுறுத்தலாக கருதப்படாத இந்த பறக்கும் பொருள், எண்கோண வடிவில் இருந்ததாகவும் இது ஒரு ஆளில்லா விமானம் என்றும் கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி 14:42 மணிக்கு(19:42 GMT) F-16 போர் விமானத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையால் இது வீழ்த்தப்பட்டது.
ஒரு மாதத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட 4 பறக்கும் பொருட்கள்
இச்சம்பவம் இந்த மாதம் வட அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட பறக்கும் பொருட்களைப் பற்றி மேலும் கேள்விகளை எழுப்பி உள்ளன. சந்தேகத்திற்கிடமான சீன "வேவு" பலூன் பிப்ரவரி 4 அன்று தென் கரோலினா கடற்கரையில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த பலூன் சீனாவிற்கு சொந்தமானது என்றும் அமெரிக்காவின் முக்கிய இடங்களைக் கண்காணிக்கப் இது பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பறக்கும் பலூன் உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதை மறுத்த சீனா, அது வானிலை கண்காணிப்பு சாதனம் என்றும், அது தவறுதலாக வழிமாறி அமெரிக்காவிற்குள் நுழைந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தது. அந்த சம்பவம் நடந்ததில் இருந்து, அமெரிக்கா மேலும் 3 அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை சுட்டு வீழ்த்தி இருக்கிறது. இந்த பொருட்கள் எங்கிருந்து வந்தது என்பதை அதிகாரிகள் பகிரங்கமாக அடையாளப்படுத்தவில்லை.